ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்ப, பா.ஜ.க, தெலுங்கு தேசம் கட்சிகளோடு இணைந்து செயல்பட போவதாக ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலோடு ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதில் ஜனசேனா கட்சி, ஏற்கனவே பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியும் பா.ஜ.க கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியோ, மத்தியில் மோடி அரசோடு நெருக்கம் காட்டி வருகிறது. பவன் கல்யாணுடன் பா.ஜ.க கூட்டணியில் இருந்தாலும், ஜெகன்மோகன் ரெட்டி பற்றி எதுவும் பேசுவதில்லை.
நேற்று நடந்த தேசிய ஜனநாயக முன்னணியின் கூட்டத்தில் அ.தி.மு,க உள்ளிட்ட பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் கலந்து கொண்டன. இதில் ஜனசேனாவின் பவன் கல்யாணும் கலந்து கொண்டார். தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பவன் கல்யாண், ஆந்திராவில் ஒரு வலிமையான கட்சி ஆட்சியில் இருக்கிறது. ஜெகன் மோகன் ஆட்சியை வீழ்த்தவதற்கு அனைவரும் இணைந்து செயல்பாட்டாக வேண்டும். பா.ஜ.க கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியும் இணைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
ஒவ்வொரு கட்சியும் தாங்கள்தான் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்றும், முதல்வராக வரவேண்டும் என்றும் நினைப்பதில் தவறில்லை. தேர்தல் முடிவுகள்தான் அனைத்தையும் தீர்மானிக்கப் போகின்றன. அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் யார் முதல்வர் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் சந்திர பாபு நாயுடுதான் முதல்வர் என்பதில் தெலுங்கு தேசம் கட்சி உறுதியாக இருக்கிறது. இதற்கு பவன் கல்யாணம் ஒப்புக் கொள்வாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.