

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட மிகத்தீவிரமான ஆய்வின் முடிவுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. பொதுவாக 100 கிராம் வடித்த சாதத்தில், 3.5 மி.கிராம் இரும்பு சத்து இருக்கும். அதே சாதத்தை 12 மணி நேரம் நீரில் ஊறவைக்கப்படும் போது இரும்பு சத்து 74 மில்லி கிராம் அளவுக்கு அதாவது சுமார் 21 மடங்கு பெருகுகிறது என ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. கர்ப்ப காலங்களில் ரத்த சோகையால் அவதியுறும் தாய்மார்களுக்கு விலை உயர்ந்த வேதி மருந்துகளை விடவும் இந்தஎளிய நீராகராம் ஒரு ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது.
பழைய சோறில் உள்ள பாக்டீரியாக்கள் வைட்டமின் B1, B12, B6 போன்றவற்றை உற்பத்தி செய்ய உதவுகின்றன. இதில்நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் எளிதில் ஜீரணமாகக்கூடிய தாதுக்கள் நிறைந்துள்ளன.நொதித்தல் என்ற இயற்கை மாற்றத்தின் மூலம் உடலுக்கு தீமை விளைவிக்கும் அமிலங்கள் சிதைக்கப்பட்டு சத்துக்கள் நேரடியாக உடலில் சேர்வதற்கு பழைய சோறு வழிவகுக்கிறது.
மலச்சிக்கல், சிறுநீரக கோளாறுகளுக்கும் நல்ல தீர்வை தருவதாக பழைய சோறு உள்ளது. நமது குடலில் லட்சக்கணக்கான ‘நல்ல பாக்டீரியாக்கள்’ உள்ளன. தவறான உணவு முறை மற்றும் மன அழுத்தத்தால் இந்த பாக்டீரியாக்களின் சமநிலை மாறும்போது குடல் புண்கள் ஏற்படுகின்றன. அதேபோல் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் கடைகளில் விற்கும் நொறுக்குதீனிகளை சாப்பிடுவதால் கூட குடல் அழற்சி நோய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படலாம்.
பழைய சோறு குடல் நோய்களுக்குத் தீர்வாக அமையலாம். ஏனெனில் பழைய சோற்றில் இயற்கையாகவே அதிகப்படியான புரோபயாட்டிக் பாக்டீரியாக்கள் (Probiotics) உள்ளன. அதாவது பழைய சோறு நொதித்த உணவாக இருப்பதால், குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிக அளவில் கொண்டுள்ளது. இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செரிமானத்தை ஊக்குவித்து, குடலின் உட்புறச் சவ்வுகளின் (mucus layer) செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. மேலும் குடலில் உள்ள பாக்டீரியா சமநிலையைச் சீராக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
பழைய சாதத்தில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் அளவை கண்டுபிடிக்கவும், ஆய்வு செய்யவும் ரு.2.7 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. ஸ்டான்லி மருத்துவமனையின் ஆய்வு, பழைய சோறு குடல் அழற்சி நோயை (inflammatory bowel disease)(IBD) குணமாக்குவதை நிரூபித்துள்ளது.
தமிழக அரசின் நன்மதிப்பையும், சுகாதார துறையின் பாராட்டையும் பெற்றுள்ள இந்த ஆய்வு நம் மண்ணின் பாரம்பரிய உணவின் மகத்துவத்தைமீண்டும் ஒருமுறை பரைசாற்றி உள்ளது.
இந்தப்பழைய சோறு சிகிச்சையினால்,நிறைய பேருக்கு குடல் அழற்சி நோய் சரியாகி அறுவை சிகிச்சையின்றி வீடு திரும்புகிறார்கள் என்று ஸ்டான்லி மருத்துவமனை இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக அல்சர் என்று வரும் நோயாளிகளுக்கு இங்கு அறுவை சிகிச்சை செய்வதில்லை. அவர்களுக்கு, பழைய சோறும், குடல் புண்ணை ஆற்றும் மருந்துகளையும் கொடுத்து, குடல் அழற்சி நோயை குணப்படுத்தி அனுப்பி வைக்கிறோம் என்கின்றனர் ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள்.
தமிழர்களின் பராம்பரியமான நீர் ஆகாரம், பழைய சோறு, ஆங்கில மருத்துவத்தில் குடல் அழற்சி நோயை குணமாக்குவதை, ஆதாரபூர்வமாக ஸ்டான்லி மருத்துவமனை நிருபித்துள்ளது.
பழைய சோற்றில் விட்டமின்கள், செரிமானத்தை தூண்டும் நல்ல பாக்டீரியாக்கள், நோயெதிர்ப்பு சக்தி, உடல் சூடு தணிதல், மலச்சிக்கல் இல்லாமல் ஆரோக்கியாக இருப்பது, எலும்புகள் பலமாக இருக்க பேருதவி புரிவதாக அமெரிக்கா ஊட்டசத்து விஞ்ஞானிகள் ஆய்வில் நம்மூர் பழைய சாதத்திற்கு புகழ் மகுடம் சூட்டி, ஆய்வு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய உணவான பழைய சோறு, நவீன ஆய்வுகளின்படி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, குடல்நோய்களுக்கான சிகிச்சையிலும் முக்கியப் பங்கு வகிப்பது இதன் மூலம் நிரூபனமாகியுள்ளது.
இனிமேல் வீட்டில் சாதம் மிச்சமானால் அதை குப்பையில் கொட்டாமல்,நீர் ஊற்றி,அதை பழைய சாதமாக மாற்றி, மறுநாள் காலையில் உண்டால், நமது உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது.