தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த அரசில்வாதியும், திமுக தலைவருமான மு.கருணநிதி கடந்த 2018ம் ஆண்டு காலமானார். அவரது உடலை எங்கு புதைப்பது என்பது குறித்து பல்வேறு பிரச்னைகளுக்குப் பிறகு, நீதிமன்றத் தீர்ப்பின்படி மெரினா கடற்கரையில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அதையடுத்து, 2.23 ஏக்கர் நிலப்பரப்பளவில் நினைவிடமும் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த திமுக அரசு, சென்னை மெரினாவில் மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்க முடிவு செய்தது. இதற்காக 81 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை மீறி பேனா சின்னம் அமைத்தால் அதை உடைப்பேன்’ என்று கூறி இருக்கிறார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு, அண்மையில் 15 நிபந்தனைகளை விதித்து சென்னை மெரினா கடலில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை அமைத்துக்கொள்ள ஒப்புதல் அளித்து இருக்கிறது.
இந்த நிலையில், சென்னை மெரினா கடலில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து இருக்கிறார். இது தவிர, ஏற்கெனவே மீனவர்கள் சங்கமும் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.