meta property="og:ttl" content="2419200" />

விதிகளை மீறும் அரசு வாகனங்களுக்கு அபராதம் - போக்குவரத்துத் துறை அதிரடி!

விதிகளை மீறும் அரசு வாகனங்களுக்கு அபராதம் - போக்குவரத்துத் துறை அதிரடி!
Published on

போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக ஓட்டிச் செல்லப்படும் அரசு வாகனங்கள், சிக்னலில் நிற்காமல் செல்லும் அரசு வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போக்குவரத்துத்துறை எச்சரித்திருக்கிறது. சமீப காலமாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது ஸ்பாட் பைன் விதிப்பது அதிகரித்திருக்கிறது.

இருவர் பயணம் செய்யும் மோட்டார் சைக்கிளில் இருவருமே ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்கிற விதி சென்ற ஆண்டு அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் கடுமையாக பின்பற்றப்பட்டாலும் காலப்போக்கில் தளர்வுகளை சந்தித்தது.

இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளில் நடைபெறும் போக்குவரத்து காவல்துறையினரின் சோதனையில் ஒரே ஒரு ஹெல்மெட் அணிந்து இருவர் பயணம் செய்யும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

சாலைகளில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவு செய்யப்படும் காட்சிகளின் அடிப்படையிலும் அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னையில் மட்டும் கடந்த 4 மாதங்களில் 6 கோடி ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடமிருந்து 12 கோடி ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறும் அரசு வாகனங்கள், அரசுப் பேருந்துகள், அரசு ஊழியர்கள் & காவல்துறையினரின் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது இல்லை என்று எழுந்துள்ள புகார்களால் அரசு வாகனங்களாக இருந்தாலும் அபராதம் விதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறி நடந்து கொள்ளும் அரசு வாகனங்களை காமிராவில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அரசு வாகனம் என்பதை குறிக்கும் வகையில் 'அ' என தமிழிலும், 'ஜி' என ஆங்கிலத்திலும் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களுக்கு பயன்படுத்துவதும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அரசு வாகனங்கள் என்னும் பெயரில் பலர் போக்குவரத்து விதிகளை மீறுவதாக வந்த புகார்களை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இதில் ஏதேனும் விதி மீறல் 1500 ரூபாய் வரை உடனே அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் தங்களுடைய சொந்த வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி பயன்படுத்தினாலும் பொதுமக்கள் புகார் கொடுக்க முடியும். இனி யார் எத்தகைய விதிமீறல்களில் ஈடுபட்டாலும் போக்குவரத்துத்துறையின் இணையத்தளத்தில் புகார் அளிக்க வசதி செய்யப்பட்டிருக்கிறது. புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

அபராதத் தொகையை வசூலிக்க நடு ரோட்டில் நீண்டநேரம் காத்திருக்க வைப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் எழுந்திருக்கின்றன. மது அருந்தாதவர்கள் மீது மது அருந்தியதாக தவறாக குற்றம் சாட்டப்பட்டு அபராதத் தொகை விதிக்கப்படுவதாகவும் மக்கள் மத்தியில் அதிருப்திகள் எழுந்திருக்கின்றன. அபராதத் தொகையை கணிசமாக உயர்த்தியுள்ள போக்குவரத்துத்துறையின் நடவடிக்கைகளில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com