பள்ளி மாணவர்களை ஏற்றி வரும் வாகனங்கள் விதிமுறைகளை மீறினால் அபராதம் - தமிழ்நாடு, புதுவை அரசு உத்தரவு!

பள்ளி மாணவர்களை ஏற்றி வரும் வாகனங்கள் விதிமுறைகளை மீறினால் அபராதம் - தமிழ்நாடு, புதுவை அரசு உத்தரவு!
Published on

சமீபகாலங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றிவரும் ஆட்டோ, வேன் உள்ளிட்டவை விபத்தை சந்தித்து வருவதால் கண்காணிப்பை பலப்படுத்துமாறு தமிழ்நாடு, புதுவை மாநில போக்குவரத்துத்துறை காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது. இதையெடுத்து மாநிலம் முழுவதும் வாகன சோதனை தீவிரமடைந்திருக்கிறது.

கடந்த வாரம் பாண்டிச்சேரி புஸ்சி வீதியில் தனியார் பேருந்தும், பள்ளி மாணவ்ர்களை ஏற்றி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 8 மாணவர்களும் ஆட்டோ ஓட்டுநரும் பலத்த காயமடைந்து புதுவை அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மயிரிழையில் 8 மாணவர்கள் உயிர் பிழைத்திருப்பது புதுவையில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காயமடைந்த குழந்தைகள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தேறி வருகிறார்கள். பேருந்து வேகமாக வந்த காரணத்தினால் விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி வரும் ஆட்டோ, வேன் உள்ளிட்டவை கட்டுங்கடங்காத வேகத்தை செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த காலத்தில் ஏற்பட்ட விபத்துகளில் ஏராளமான மாணவ, மாணவியர் உயிரிழந்திருக்கிறார்கள். பள்ளி வளாகத்தில் இறக்கிவிடாமல் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் மாணவர்களை இறக்குவதன் மூலமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில் பாண்டிச்சேரியில் நடந்த விபத்தின் எதிரொலியாக அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு போக்குவரத்துத்துறை காவல்துறையினர் அபராதம் விதித்து வருகிறார்கள். ஆட்டோக்களில் 5 மாணவர்களுக்கு மேல் ஏற்றிச்செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களை அழைத்து வந்த ஆட்டோக்களை நிறுத்தி போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகிறார்கள். ஆட்டோக்களில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆட்டோவில் செல்போனில் பேசிய படியோ, வேகமாகவோ ஓட்டக்கூடாது, மாணவர்களின் புத்தகப் பைகளை ஆட்டோவில் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் வகையில் தொங்க விடக்கூடாது, போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் மட்டுமல்ல தமிழகத்திலும் போக்குவரத்து காவல்துறையினர் திடீர் ஆய்வில் இறங்கியிருக்கிறார்கள். நாகர்கோவிலில், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ஒரே நாளில் 217 பேர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிக மாணவர்களை ஏற்றி வந்த 3 ஆட்டோக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அதிகமான மாணவர்களை ஆட்டோவில் அழைத்துச் செல்பவர்களிடமிருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் 5க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆட்டோவில் அடைத்து வைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்வதை பார்க்க முடிகிறது. ஆட்டோ கட்டணம் குறைவாக இருக்கிறது என்பதற்காக பெற்றோர்களும் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். எந்தவொரு ஆட்டோவிலும் 5 மாணவர்களுக்கு மேல் பயணம் செய்வது சரியல்ல என்பதை பெற்றோர்களும் உணர்வதில்லை. வாகன ஓட்டுநர்களின் அலட்சியம் மட்டுமல்ல, பெற்றோர்களின் அலட்சியமும் பெரும் விபத்துகளுக்கு காரணமாகிவிடுகிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com