’மசோதாக்கள் நிலுவை என்பது ஜனநாயக உரிமையை மறுப்பதற்குச் சமம்’ பினராயி விஜயன்!

’மசோதாக்கள் நிலுவை என்பது ஜனநாயக உரிமையை மறுப்பதற்குச் சமம்’ பினராயி விஜயன்!

மீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசின் அதிகார வரம்புகள் குறித்தும், அரசு கொண்டுவரும் மசோதாக்களின் மீது ஆளுநரின் உரிமைகள் குறித்தும், குடியுரிமைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடையே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கெதிராக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வர, அன்று மாலையே பல நாட்களாகக் கிடப்பில் இருந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

அதைப்போலவே, தெலங்கானாவிலும் மாநில அரசு கொண்டுவந்த பல சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதலளிக்காமல் நிலுவையில் வைத்திருந்ததால் பி.ஆர்.எஸ் அரசு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. பின்னர் நிலுவையிலிருந்த மசோதாக்களில் மூன்றுக்கு மட்டும் ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்தார். அதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் ஆளுநர்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருமாறு அந்தந்த மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். கடிதம் கிடைத்த சில நாட்களிலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியிலும் துணை நிலை ஆளுநருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஸ்டாலினுக்குப் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், ``உங்கள் கடிதம் எனக்குக் கிடைத்தது. கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளை நான் முழுமையாகப் பாராட்டுகிறேன். மேலும், அவை கேரளாவில் நாங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகின்றன. நீங்கள் கூறியிருப்பது போல, தற்போது பல மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் இந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றன. கேரளாவில் கூட, சட்டமன்றத்தில் உரிய விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்கள் ஆளுநரால் தேவையில்லாமல் நீண்டகாலமாக நிலுவையில் வைக்கப்பட்டிருகின்றன. அவற்றில் சில வருடக்கணக்கில் நிலுவையில் இருக்கின்றன. அமைச்சர்கள், அதிகாரிகள் ஆளுநரிடம் விளக்கமளித்தபோதிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. வாக்காளர்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்பட்ட சட்ட நடவடிக்கைகளை மிக நீண்ட காலமாக நிறுத்திவைப்பது என்பது மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்குச் சமம்.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருக்கும் மாநில அரசைக் கலைக்க இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356 அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 1959ல் கேரளாவில் நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு, 1976, 1991ல் தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு கலைக்கப்பட்டதே இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். நமது அரசியலமைப்பின் கூட்டாட்சிப் பிரிவின் பாதுகாவலர்கள் என்ற முறையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறைவதைத் தடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் நாம் ஒத்துழைக்க வேண்டும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கால அவகாசம் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அது நியாயமான ஒன்றாக இருக்க வேண்டும். நீதிபதி எம்.எம்.புஞ்சி ஆணையம் மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பாக, சட்டப்பிரிவு 200ல், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய காலக்கெடுவைக் குறிப்பிட பரிந்துரைத்திருக்கிறது. இந்த விஷயத்தில், நாங்கள் உங்களுக்கு முழு மனதுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். மேலும், உங்கள் கடிதத்தில் உள்ள முன்மொழிவை மிகுந்த தீவிரத்துடன் பரிசீலிப்போம்" என்று பினராயி விஜயன் கூறியிருக்கிறார்.

பினராயி விஜயனின் இந்த பதில் கடிதத்துக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து, `தீ பரவட்டும்' என ட்வீட்டரில் பதிவு செய்து இருக்கிறார்.­­­­

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com