ஒரு தனியார் நிறுவனம், 82 ஆயிரம் சம்பளத்துடன் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படம் பார்ப்பதற்கு ஒரு ஆளை வேலைக்கு தேடி வருகிறது. இவர்களது வேலையே 20 மணி நேரமும் திரைப்படத்தைப் பார்ப்பதுதான்.
ஹாலிவுட் திரையுலகிலேயே மிகவும் பிரபலமான திரைப்பட வரிசைகளில் 'பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்' மக்களை வெகுவாகக் கவர்ந்த திரைப்படம் என்றே கூறலாம். இதுவரை 9 பாகங்கள் இத்திரைப்பட வரிசையில் வெளியாகி உள்ள நிலையில், சமீபத்தில் அதன் பத்தாவது பாகமும் வெளியாகி வசூலில் வேட்டையாடி வருகிறது. இதன் வரிசையில் வந்த திரைப்படக் கதைகள் பெரும்பாலும் காரைச் சுற்றியே நகரும். எனவே, கார் பிரியர்களுக்கு இந்த திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும்.
இந்நிலையில், இந்தத் திரைப்படங்களைப் பார்ப்பது தான் வேலையே எனக் கூறி, ஒரு நிறுவனம் வேலைக்கு ஆட்களைத் தேடி வருகிறது. இந்தப் பணிக்கு சேரும் நபர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸில் இதுவரை வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல், இத்திரைப்படத்தில் நடக்கும் விபத்துக் காட்சிகள் குறித்து விலாவறியான குறிப்புகளை எழுதிக்கொடுக்க வேண்டும். குறிப்புகள் என்றால் திரைப்படத்தில் எங்கெல்லாம் விபத்துக்கள் ஏற்படுகிறது. விபத்தில் சிக்கிய வாகனங்கள் என்னென்ன. அந்த விபத்தில் வாகனத்திற்கு எதுபோன்ற சேதங்கள் ஏற்பட்டது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை ஒட்டுமொத்தமாக எழுதிக் கொடுக்க வேண்டும்.
'பைனான்ஸ் பஸ்' என்ற நிறுவனம்தான் இந்த வேலையை அறிவித்துள்ளது. இந்த வேலையை சரியாக செய்து கொடுப்பவர்களுக்கு 1000 அமெரிக்க டாலர்கள் சம்பளமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 82,000 சம்பளமாக வழங்குவார்கள். இதுமட்டுமின்றி, இத்திரைப்படத்தை இணையத்தில் பார்க்கும்போது ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்காக தினமும் 100 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும்.
இந்த வேலையை செய்து முடிப்பவர் தரும் குறிப்புகளை வைத்து, பைனான்ஸ் பஸ் நிறுவனமானது தனது ஆட்டோமொபைல் பைனான்ஸ் திட்டங்களுக்கான ஆய்வுகளைச் செய்ய பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்படும்போது சாதாரண வேலை போல இருந்தாலும், இதுவரை வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் அனைத்து பாகங்களையும் சேர்த்தால் 20 மணி நேரத்திற்கும் மேல் படம் ஓடும். அவற்றில் நடக்கும் வாகன விபத்துகளை சரியாக கவனித்துக் கட்டுரை எழுதுவதற்குள் போதும் போதும் என ஆகிவிடும்.
இதுகுறித்த கட்டுரை எழுதவே 200 மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்கின்றனர். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை பார்த்தாலும், இதை முழுமையாக முடிக்க 25 நாட்களுக்கு மேல் தேவைப்படும் எனத் தெரிகிறது. 18 வயது நிறைந்த அமெரிக்காவைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர் யார் என்பதை வரும் 26 ஆம் தேதி பைனான்ஸ் பஸ் நிறுவனம் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.