மக்கள் ராகுல்காந்தியை ஏற்க தயாராகிவிட்டார்கள் - சரத் பவார்!

மக்கள் ராகுல்காந்தியை ஏற்க தயாராகிவிட்டார்கள் - சரத் பவார்!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என்பதை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.எனினும் நாட்டின் வளர்ச்சி பற்றிய சிந்தனையுடன்கூடிய பொதுவான ஒரு தலைவர் எதிர்க்கட்சிகளுக்குத் தேவை என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிகார் முதல்வர் நிதிஷ்குமார் இருவரையும் வெகுவாக பாராட்டினார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த அமோக வெற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கு கிடைத்த வெற்றியாகும். யார் என்ன சொன்னாலும் என்னைப் பொருத்தவரை மக்கள் ராகுலின் கொள்கைகளை ஏற்று அவரது கரத்தை வலுப்படுத்த தயாராகிவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமாருக்கும் எனது பாராட்டுகள்.

தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. அப்படியிருக்கையில் பிரதமர் வேட்பாளராகும் கேள்விக்கே இடமில்லை. எனக்கு பிரதமராகும் ஆசையும் இல்லை. தேசத்தின் வளர்ச்சிக்காக செயல்படக்கூடிய தலைவர் ஒருவர்தான் இன்றைய தேவை என்றார் சரத் பவார்.

எதிர்க்கட்சி கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த பவார், இதுபற்றி இதுவரை விவாதிக்கப்படவில்லை. எனது வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது என்றாலும், மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணித் தலைவர்கள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். உத்தவ் தாக்கரே, சோனியாகாந்தி அல்லது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நான் ஒன்றாக

அமர்ந்து பேசி இதுகுறித்து முடிவெடுப்போம் என்றார் சரத்பவார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றதை அடுத்து நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் பவாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கர்நாடக தேர்தலில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ராகுல், பாரத் ஜடோ யாத்திரை சென்ற 51 தொகுதிகளில் 36 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முதல்வர் நிதிஷ்குமார், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com