சென்னையில் இன்று அ.ம.மு.க கட்சி அலுவலகத்தில், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை மாநில, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ம.சுப்பிரமணியன் பேசியதாக "எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் செயல் படுத்தப் பட்ட திட்டம் தான் அம்மா உணவகம். ஆண்டுக்கு பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடிய திட்டம்' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியதாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய தினகரன் ``மா.சுப்பிரமணியன் மாசு இல்லாமல் பேசணும். ஏழை எளிய மக்கள், முதியவர்கள், தொழிலாளர்கள் அதனால் எவ்வளவு பலன் பெற்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். குறைந்த விலையில் நல்ல தரமான உணவு.
அதுவும் விலைவாசி உயர்வு நேரத்தில் அரசாங்கமே, அம்மா உணவகங்கள் மூலம் உணவு கொடுத்ததைப் பொருளாதார நிபுணர்கள் பாராட்டினார்கள். பிற மாநிலங்களில் இருந்தெல்லாம் வந்து திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவது என்று பார்த்து அங்கு அமல்படுத்தினார்கள். இதையெல்லாம் மா.சுப்பிரமணியன் மறந்து விட்டாரா? எப்போ பார்த்தாலும் அரசியல் செய்வதுதான் அவர்களின் வேலையாகி விட்டது. மக்கள் என்ன முட்டாள்களா?
தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன், அம்மாவின் திட்டங்களுக்கெல்லாம் எல்லாம் மூடுவிழா நடத்தணும், இல்லையென்றால் அவர்களின் தலைவர் கலைஞரின் பெயரில் மாற்றி வைக்கணும் என்பதுதான் தி.மு.க அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கிறது. அவர்களெல்லாம் திருந்தவே மாட்டார்கள் என்பதற்கு இதுதான் உதாரணம். தட்டுப் பாடுகளை உருவாக்கி அந்த திட்டத்தைச் செயல் பட விடாமல் செய்யப் பார்க்கிறார்கள். வாக்களித்தவர்களை ஏமாற்றாமல், திராவிட மாடல் என பொய் சொல்லாமல், ஏற்கெனவே அம்மா கொண்டு வந்த திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்" என்று கட்டமாக கூறினார்.