இந்திய அரசு கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதாகக் கூறி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால் மக்கள் பலரும் பெரும் அவதிக்கு உள்ளானதைக் கண்டோம். அதேபோல், நைஜீரியா நாட்டிலும் சமீபத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நமது இந்தியாவைப் போலவே அந்த நாட்டிலும் இந்த பண மதிப்பிழப்புக்கு ஊழலே காரணமாகக் கூறப்படுகிறது. இந்த திடீர் நடவடிக்கையால் அந்நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி, கிளர்ச்சியில் இறங்கி உள்ளனர்.
நைஜீரிய அரசின் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அந்நாட்டின் 200 நைரா, 500 நைரா மற்றும் 1000 நைரா நோட்டுகள் செல்லாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் பெரும் கவலைக்குள்ளான மக்கள் தாங்கள் வைத்திருக்கும் மேற்கூறிய மதிப்புள்ள நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளில் குவிந்துள்ளனர். இதனால் அந்த நாட்டில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும், இதனால் கோபமுற்ற சிலர் வங்கிகள், ஏடிஎம் மையங்கள் போன்றவற்றின் மீது தாக்குதலை நடத்தியும், சாலைகளில் போராட்டம் செய்தும் வருகின்றனர்.
அரசின் இந்த திடீர் அறிவிப்பைக் கண்டித்து அந்நாட்டு எதிர்கட்சிகள், ‘இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் அன்றாட உணவுக்கே தவித்து வருகின்றனர்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த நடவடிக்கைக் குறித்து அந்நாட்டை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘எனது சம்பளம் கடந்த வாரம் வந்தது. ஆனால், இதுவரை என்னால் அந்தப் பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியவில்லை' என்று கூறுகிறார்.
கடந்த வருடம் அக்டோபர் மாதமே 200 நைரா, 500 நைரா மற்றும் 1000 நைரா ஆகிய நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்யவிருப்பதாக நைஜீரியாவின் மத்திய வங்கி அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நைஜீரிய அதிபர் தேர்தல் வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அந்நாட்டில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.