சென்னை போன்ற பெருநகரங்களில் கார் பார்க்கிங் செய்வதென்பது பெரும்பாலும் பொறுமையைச் சோதிக்கக் கூடிய விஷயமே!
இப்போதெல்லாம் ஒரு தெருவில் கார் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம் போல... அவ்வளவு தூரத்துக்கு கார்களின் எண்ணிக்கை மாதா மாதம் பெருகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அத்தனை கார்களுக்கும் அவரவர் வீடுகளில் பார்க்கிங் வசதி இருக்கிறதா என்பதைத் தாண்டி இப்பொதெல்லாம் நகருக்குள் பார்க்கிங் வசதி உண்டா என்று ஒவ்வொரு இடத்தையும் ஆராய வேண்டியதாயிருக்கிறது. இல்லையேல் மெனக்கெட்டு பல மைல் தூரம் பயணித்தும் கூட நாம் செல்லும் இடத்தில் பார்க்கிங் வசதி கிடைக்கா விட்டால் பிறகு நமது இலக்கை மாற்றிக் கொண்டு வேறு எங்காவது செல்ல வேண்டியதாகி விடுகிறது. அது தரும் ஏமாற்ற உணர்வு சொல்லில் அடங்காதது.
கடந்த ஞாயிறு அன்று மாலையில் சினேகிதி ஒருவர் குடும்பத்துடன் காரில் பெசண்ட் நகர் கடற்கரைக்கு கிளம்பினார். செல்லும் வழியெங்கும் போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி சாலைகள அதீத சுதந்திரத்துடன் இருந்ததில் அவருக்கு அப்படியொரு சந்தோசம். ஆனால், கடற்கரைக்குச் சென்ற பிறகு தான் சோதனை ஆரம்பித்தது. பார்க்கிங் ஏரியா மொத்தமும் ஃபுல். சரி அடுத்தடுத்த தெருக்களில் எங்காவது பார்க் செய்ய முடியுமா என்று தேடினால் நான்கைந்து முறைகள் தெருக்களைச் சுற்றி வந்தது தான் மிச்சம். துளி இடம் இல்லை. பல இடங்களில் வீடுகள், அபார்ட்மெண்டுகள் என்பதால் அனேகமும் நோ பார்க்கிங் ஏரியாக்கள் வேறு!
கிட்டத்தட்ட 18 கிலோ மீட்டர்கள் பயணித்து பெசண்ட் நகர் கடற்கரையில் சில மணி நேரங்களைச் செலவிட நினைத்தது மொத்தமும் வீண் முயற்சியானது. காரணம் இந்த கார் பார்க்கிங் பிரச்சனை.இப்படி ஏமாற்றம் அடைந்து நின்றவர்களுக்கு கீழ்க்காணும் செய்தி கொஞ்சமே கொஞ்சம் ஆறுதல் தரக்கூடும்.
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன், அதன் ஆன்-ஸ்ட்ரீட் பார்க்கிங் மேனேஜ்மென்ட் திட்டத்தின் கீழ், நகர சாலைகளை சீரமைக்க அக்டோபர் மாதத்திற்குள் மேலும் பல தெருக்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது. தற்போது, கோடம்பாக்கம், அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் உள்ள 49 தெருக்களில் சுமார் 5,220 அளவில் சமமான கார் பார்க்கிங் இடங்கள் (ECS) உருவாக்கப்பட்டுள்ளன. 2018 இல் தொடங்கப்பட்டட் இத்திட்டத்தில் இருந்து இதுவரை கார்ப்பரேஷனுக்கு ரூ. 11.34 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது குடிமை அமைப்பு.
இது மொபைல் பயன்பாடானது, CCTV வசதிகள் மற்றும் மனிதவளத்துடன் 2019 இல் 700 கார் பார்க்கிங் இடங்களாக அதிகரித்தது.இப்போது இத்திட்டத்தின் மூலமாக அரசுக்கு வருவாய் நன்றாக இருப்பதாகவும், திட்டத்தை விரிவுபடுத்தவிருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் ஜே ராதாகிருஷ்ணன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். “இந்த ஒப்பந்தம் இந்த அக்டோபரில் முடிவடைகிறது. நாங்கள் புதிய டெண்டர்களை விடுக்கும் போது, மேலும் சில மண்டலங்களையும் கூடுதல் கார் பார்க்கிங் இடங்களையும் இதில் சேர்ப்போம், ”-என்று அவர் கூறினார்.
2020-2021 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் அரசுக்கு கிடைத்த வருவாய்த்தொகையான ரூ. 1.5 கோடியானது கடந்த 2022-2023ல் ரூ. 4.3 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே, 2025 ஆம் ஆண்டுக்குள் 12,000 கார் பார்க்கிங் இடங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தக்காரரான SS Tech மற்றும் Toorq Media Services இன் பிரதிநிதி ஒருவர் கூறுகையில்,
“2019 இல் 700 ECS கார் பார்க்கிங் வசதிகள் மட்டுமே இருந்தன. அதுவே, 2021 இல் 2,500 ஆகவும், 2022 இல் 4,000 ஆகவும், 20230 இல் 5,220 ஆகவும் மாறியது. ஆனால், எங்களின் ஸ்மார்ட் பார்க்கிங் பயன்பாட்டில் இதுவரை 10,000 பதிவிறக்கங்கள் மட்டுமே உள்ளன, மேலும் இப்படியான திட்டத்தின் கீழ் பார்க்கிங்கிற்கு சொந்தமாக பணம் செலுத்த யாரும் தயாராக இல்லை. எனவே, ஆரம்பத்தில் பார்க்கிங் தொகை சேகரிப்புக்காக ஒரு தெருவுக்கு குறைந்தது நான்கு பேரையாவது நாங்கள் பணியமர்த்த வேண்டியிருந்தது. இப்போது கடந்த காலங்களை விட படிப்படியாக வசூல் மேம்பட்டுள்ளது,'' என்றார்.
GCC இன் நகர வருவாய் அதிகாரி சிட்டி பாபு கூறுகையில், அவர்களின் ஆன்-ஸ்ட்ரீட் பார்க்கிங் மேலாண்மை திட்டத்தை ஆய்வு செய்ய ஒரு குழு பெங்களூரு சென்றுள்ளதாகத் தெரிவித்தார் . “நாங்கள் மேலும் கணிசமான அளவில் பார்க்கிங் இடங்களைக் குறிப்பதற்காக நகரத்தின் சாலைகளைப் பற்றி மேலும் படிக்கத் தொடங்கியுள்ளோம். விரைவில் அனைத்து மண்டலங்களுக்கும் டெண்டர்கள் கோரப்பட்டு மேலும் ஒப்பந்ததாரர்களைச் சேர்ப்போம். எங்களின் முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இந்தச் சேவையை மேலும் மேம்படுத்துவோம்,'' என்றார். இந்த திட்டம் வெற்றி அடைந்து மாநிலத்தின் அனேக இடங்களுக்கும் பரவினால் நல்லது தான்.