ஆற்றில் துள்ளிக்குதித்து ஓடும் மீன்களைப் பார்ப்பது அழகு. ஆனால் அந்த மீன்கள் இறந்து கரையோரத்தில் மிதந்து வருவதைப் பாரத்தால்? அதிலும் செத்த மீன்களின் துர்நாற்றமும் சேர்ந்தால்? இதோ சேலத்தின் காவிரிக் கரையோரம் வசிக்கும் இந்த மக்களைப் போலத்தான் புலம்பி முகம் சுளிக்க நேரும்.
மேட்டூர் அடுத்த செக்கானூர் மின் உற்பத்தி கதவணையில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் காவிரியில் தண்ணீர் இன்றி ஆயிரக்கணக்கான மீன்கள் செத்துக் கரையில் ஒதுங்கியுள்ளது. இதனால் காவிரி கரையோர கிராமங்களில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் குறுக்கே செக்கானூர் நீர்மின் உற்பத்தி கதவணை அமைந்துள்ளது. இந்த கதவணையில் குடிநீர் திட்ட பணிகளுக்காகவும், மீன்வளத்தை பாதுகாக்கவும் பயன்படும் 0. 50 டி எம் சி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கதவணையின் வருடாந்திர பணி பராமரிப்பு பணிகளுக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரை நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டதால் காவிரியில் ஆங்காங்கே குட்டை போல் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் சிற்றோடை போல செல்கிறது இதனால் குட்டைகளில் உள்ள மீன்கள் கடும் வெப்பம் காரணமாகவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவும் டன் கணக்கில் மடிந்துள்ளது.
குறிப்பாக ஆரஞ்சான், ஆராய், ஜிலேபி உள்ளிட்ட மீன் வகைகள் ஏராளமாக செத்து மிதக்கின்றன. இந்த மீன்களினால் காவிரிக் கரையில் உள்ள நாகப்பட்டினம், செக்கானூர், கோவில்நாயக்கன்பட்டி, காவேரி கிராஸ், நாட்டாமங்கலம் ஆகிய கிராமங்களில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. காகங்களும் கழுகுகளும் மீன்களை கொத்தி செல்கின்றன. காவிரி கரையை ஒட்டிய பகுதிகளில் உள்ள ஆலை கழிவுகள், சாக்கடை கழிவுநீர் ஆகியவை ஆற்றில் கலப்பதாலும், சில லாரி டிரைவர்கள் கேரள மாநிலத்தில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆலை கழிவுகளை ஏற்றி வந்து மேட்டூரில் காவிரி கரையோரம் உள்ள சாக்கடைகள் நீரோடைகளில் கொட்டுவதாலும் அவை நேரடியாக காவிரியில் கலக்கின்றன.
தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும்போது கழிவுகளின் பாதிப்பிலிருந்து தப்பிய மீன்கள் தண்ணீரை வெளியேற்றிய பிறகு தேங்கிய சொற்ப அளவிலான நீரில் கழிவுகள் கலப்பதால் பாதிப்பு அதிகரித்து மீன் செத்து மடிந்து இருக்கலாம் என கரையோர பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் “செத்து மிதக்கும் மீன்களை எடுத்துச் சென்று கருவாடாகி விற்பனை செய்யும் வேலையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இறந்து போன மீன்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியமும் மற்றும் மீன்வளத் துறையும் நீர் மாதிரி ஆய்வு செய்து மீன்கள் இறப்புக்கான காரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதுவுமே தூரம் இருக்கும் வரைதான் அழகு என உணர்த்துகிறது இந்த செய்தி. விரைவில் நடவடிக்கை எடுக்க மூச்சைப் பிடித்து வேண்டுகின்றனர் கிராம மக்கள்.