மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

இன்று ஏப்ரல் 13-ஆம் தேதி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாள்.

       ன்றைய தமிழ் திரையுலகில் பகுத்தறிவு கருத்து பாவலராக  வலம் வந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். நாம்  உற்சாகத்துடன் பணியில் ஈடுபடவும் அவ்வப்போது நம்மை புதுப்பித்துக் கொள்ளவும் பெரும் பொழுதுபோக்கு இசையும் பாட்டும்தான். குழந்தையின் தாலாட்டு முதல் மரணத்தின் ஒப்பாரி வரை இசையுடன் பின்னிப்பிணைந்த வாழ்வில்  குறிஞ்சிப் பூக்கள் போல் இசையையும் பாட்டையும் நேசித்து தனக்காக மட்டுமின்றி சமூக விழிப்புணர்வுக்கும் பயன்படுமாறு பாடல்களை எழுதி மக்கள் மனங்களில் என்றும் வாழ்பவர்கள் வெகு சிலரே. அவர்களில் ஒருவர்தான் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .

    அழகிய தமிழில் இனிய சொற்கள், ஆழமான பொருள், பொதுவுடமை சித்தாந்த கருத்துக்கள், வாழ்வியல் தத்துவம் என எல்லாவற்றிலும் கற்பனை வளம் பொங்க இவர் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தின் மாற்றங்களாலும் அழிக்க முடியாத கருத்துப் பொக்கிஷங்கள்.

     வேறுபாடற்ற  துணிவான எதிர்கால தலைமுறையைப் படைக்கப் பிறந்த இக்கவிஞர், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா செங்கப்படுத்தான் காடு கிராமத்தில் 13. 4 .1930  இல் பிறந்தார். தந்தை பெயர் அருணாச்சலக்கவிராயர் தாயார் விசாலாட்சி. உள்ளூர் திண்ணை பள்ளிக்கூடத்தில் ஒரு வருடம் அரிச்சுவடி படிப்பு பெற்றதோடு பள்ளிக்கல்விக்கு முற்றுப்புள்ளி. தொடர்ந்து விவசாயத்தில் ஆர்வத்துடன் விவசாயியாக வாழ்க்கையை தொடங்கியவர் பல்வேறு தொழில்களை செய்தார். இறுதியில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சக்தி நாடக சபாவில் இணைந்து நடித்தார். பின் புதுச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அங்கேயே தங்கி அவரிடம் கவிதைகள் எழுத பயிற்சி எடுத்தார்.

      அங்கிருந்து சினிமாவிற்கு பாட்டெழுதும் ஆர்வத்தில் வாய்ப்புக்காக சென்னை வந்து 1954 ல் ’படித்த பெண்’ எனும் படத்துக்கு இரண்டு பாடல்களும் எழுதிய நிலையில் அந்தப் படம் வெளிவரத் தாமதமானது. ஆனால் அந்த சமயத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ’மகேஸ்வரி’ எனும் படத்தில் பாட்டெழுத வாய்ப்பு கிடைத்து. அதுவே இவரின் திரையுலகப் பிரவேசத்தின் முதல் புள்ளியாயிற்று. அதன் பின் ’பாசவலை’ திரைப்படத்துக்கு இசையமைத்த எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் தான் மெட்டமைத்த இசைக்கு ஏற்ப நான்கே வரிகளில் மொத்த வாழ்க்கைப் பாடத்தையும் அடக்கி விட்ட இக்கவியின் அசாத்திய திறமை கண்டுகொண்டு வெகுவாக பாராட்டினார். தொடர்ந்து இவருக்கு பல வெற்றிப்பட இயக்குனர்கள் பாடல்கள் எழுதும் வாய்ப்புகளைத் தந்ததால் மட்டுமின்றி சமத்துவம் வாழ்வியல் குறித்து புதுமையான சிந்தனையுடன் எழுதிய  இவரின் பாடல்களுக்கு மக்களிடம் பெரும் வரவேற்புக் கிடைத்து பிரபலமானார்.

 மக்கள் திலகம் எம் ஜி ஆரிடம் பெரும் பாராட்டைப் பெற்றவர் இவரே. இவரின் திறமையைக் கேள்விப்பட்ட எம் ஜி ஆர் அவரை ஒரு பாடல் எழுத சொல்லிக் கேட்க அவர் உடனே கைகளால் தாளம் போட்டபடியே “சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி சோம்பலில்லாம ஏர் நடத்தி..” எனத் துவங்கும் விவசாயிகளின் நிலை குறித்த பாடலை தயக்கமின்றிப் பாட அசந்து போனார் எம் ஜி ஆர். அந்தப் பாடலுடன் மேலும் ஒரு பாடலையும் எழதி பெற்றார். அந்தப் பாடல்தான் இன்றும் எங்கும் ஒலிக்கும் “திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே” என குழந்தைகளுக்கு மனதில் தன்னம்பிக்கையும் துணிவையும் வரவழைத்த பாடல் அது.

        கவிஞரின் கருத்தான சீர்திருத்தப் பாடல்கள் எம்ஜிஆரின் புகழுக்கு ஒரு காரணமாக இருந்தது எனலாம். இதை எம் ஜி ஆரே ஒப்புக்கொண்டுள்ளார். முதலமைச்சர் ஆக இருந்த எம்ஜிஆர் ஒருமுறை வானொலி நேர்காணலின்போது “என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்கு தெரியாது. நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ “என்று மனம் திறந்து பாராட்டியதே அதற்கு சான்று.

        எம்ஜிஆரின் ஏழு படங்களுக்கும் அருமையான பாடல்களை தந்த கவிஞர் கல்யாணசுந்தரம். சிவாஜி கணேசன் நடித்த ’’மக்களை பெற்ற மகராசி’, ’அம்பிகாபதி’, உள்ளிட்ட 11 படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். இவரின் ஒவ்வொரு பாடலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றன. உதாரணமாக  டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ’கல்யாண பரிசு’ எனும் படத்துக்கு அனைத்துப் எழுதிய அனைத்துப் பாடல்களும் பிரமாத வெற்றி பெற்றன.

      வாழ்வின் நிலையாமை குறித்துப் பாடி விழிப்புணர்வு தந்த இவர் புகழின் சிகரத்தில் இருந்த போதே சற்றும் யாரும் எதிர்பாராத வகையில் 8-10-59 இல் தனது 29 ஆவது வயதிலேயே மரணத்தை தழுவியது மக்களிடையே மாபெரும் சோகத்தைத் தந்தது. கல்யாணசுந்தரத்தின் மனைவி பெயர் கௌராம்பாள். ஒரே மகன் குமாரவேல். 1959 ஆம் ஆண்டு கோவை தொழிலாளர் சங்கம்தான்  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு “மக்கள் கவிஞர்” என்ற பட்டத்தை வழங்கியது.

          81 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. விருதை முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வழங்க கவிஞரின் மனைவி பெற்றுக் கொண்டார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அனைத்து பாடல்களும் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com