சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் ஜெ.எல்.கோடு பேலஸ் நகைக் கடையில் நேற்று நள்ளிரவில் முன்பக்க ஷட்டரை வெல்டிங் மிஷின் கொண்டு வெட்டி உள்ளே புகுந்து தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான ஜெ.எல்.கோல்டு பேலஸ் என்ற நகைக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த நகைக்கடையின் முன்பக்க ஷட்டரை வெல்டிங் மிஷின் கொண்டு வெட்டி உள்ளே நுழைந்து, மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீதர் அளித்த புகாரைத் தொடர்ந்து வியாசர்பாடி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் தங்கள் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இக்கொள்ளை சம்பவத்தில் 9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர கற்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் தாங்கள் போலிஸிடம் பிடிபட்டுவிடக் கூடாது என்பதற்காக கடையில் இருந்த சிசிடிவி கேமரா, கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
கடையைச் சுற்றி நான்கு திசைகளில் உள்ள மற்ற கடைகளின் சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவில் இந்த கொள்ளை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.