நீலகிரி மாவட்டத்தில் மனித - வனவிலங்கு மோதலை தடுக்க நிரந்தர கூடாரம் - நீலகிரி ஆட்சியர் தகவல்!

நீலகிரி மாவட்டத்தில்  மனித - வனவிலங்கு மோதலை தடுக்க நிரந்தர கூடாரம் - நீலகிரி ஆட்சியர் தகவல்!

நீலகிரி மாவட்டத்தில் 5 இடங்களில் நிரந்தர கூடாரம் அமைத்து மனித - வனவிலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.  

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரி அருகே உள்ள தொத்தமுக்கை பகுதியில் கரடி தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர். மேலும் வனத்துறை அதிகாரிகளும் படுகாயமடைந்தனர். மற்றொரு சம்பவத்தில் தும்மனட்டி பகுதியில் புலி தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பிறகு அந்த புலி சுட்டுக் கொல்லப்பட்டது. இதுதவிர காட்டெருமைகளின் அட்டகாசமும், யானைகளின் அட்டகாசமும் ஊட்டி, குன்னூர், கொலக்கம்பை, கோத்தகிரி, பந்தலூர், கூடலூர் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குஞ்சப்பனை சுற்றுவட்டார பகுதிகளில் யானை தாக்கி மனித உயிர்கள் பலியாவது தொடர்கதையாகிவிட்டது. இந்த சம்பவங்கள் எல்லாம் நிகழாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து ஆட்சியர் அம்ரித் வருவாய் துறை, காவல் துறை, வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் அம்ரித் கூறியதாவது -

நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஓவேலி பகுதியில் யானை தாக்கி நௌசாத் என்பவர் உயிரிழந்துள்ளார். முதலில் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வனத்துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அதன்பொருட்டு வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் வரமால் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து வனத்துறை செயலாளர் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வருகிறார். அதன்படி, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோர் வனத்துறை செயலாளரை தொடர்புகொண்டு உடனடியாக இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கேரளாவிலிருந்து ஓவேலி வழியாக யானைகள் முதுமலைக்கு வரக்கூடிய காரணத்தினால் இப்பகுதிகளில் யானைகளினால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே முதுமலையை போன்று வட்டப்பாறை, சூண்டிமலை, பெரியசோலா, நாயக்கன்பாடி, பார்வுட் ஆகிய 5 இடங்களில் நிரந்தரமாக கூடாரங்கள் அமைத்து, பணியாளர்களை கொண்டு யானைகள் வருகை குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது குறித்து ஒரு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கும்கி யானைகள் மூலமாகவும், தொழில்நுட்ப உதவியுடன் சத்தம் எழுப்புவதன் மூலமும் யானைகளை விரட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதுவும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

மனித – வன விலங்கு மோதலை தடுக்கவும், தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளித்திடும் வகையில் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை, வனத்துறை, வருவாய்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக தொழிலாளர்கள் பணிபுரியும் நேரம், இரவு நேரங்களில் பாதுகாப்பாக செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை ஏற்படுத்தி தருவது தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு ஆட்சியர் அம்ரித் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com