
விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தவிருக்கும் ட்ரோன் பூச்சிக்கொல்லித் தெளிப்பான்கள். இது எப்படி வேலை செய்கிறது, அதன் பயன்பாடுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
சமீபகாலமாகவே தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல தொழில்துறைகள் மேம்பட்டு வருகிறது. இதற்கு விவசாயம் ஒன்றும் விதிவிலக்கல்ல. பயிர் விளைச்சலை மேம்படுத்துவதிலும், பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்த்து போராடுவதிலும் விவசாயிகள் அதிக சவால்களை எதிர்கொண்டு வருவதால், புதுமையான தீர்வுகள் அதற்கு தேவைப்படுகிறது. அத்தகைய முன்னேற்றத்தில் ஒன்றுதான் பூச்சிக்கொல்லித் தெளிப்பதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்துவதாகும். இந்த ட்ரோன்கள் மேம்பட்ட தெளித்தல் அமைப்புகளுடன் கூடிய ஆளில்லா வான்வழி வாகனங்களாக, விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இந்த ட்ரோன்கள் அதன் செயல்திறன் மற்றும் துள்ளித்தன்மையின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க நன்மையை வழங்குகிறது. வழக்கமான பூச்சிக்கொல்லித் தெளித்தல் முறையைப் போலல்லாமல், ரிமோட் கண்ட்ரோலின் உதவியோடு, பெரிய நிலப்பரப்பையும் விரைவாகவும் துல்லியமாகவும் இதைப் பயன்படுத்தி எளிதாக பூச்சிக்கொல்லித் தெளிக்க முடியும். அதிநவீன இமேஜிங் அமைப்பு மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ட்ரோன்கள், நிலத்தை தானாகவே அளவீடு செய்து, எங்கெல்லாம் பூச்சிக்கொல்லித் தெளிக்க வேண்டுமென்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து செயல்படும்.
நீண்ட காலமாகவே வழக்கமான பூச்சிக்கொல்லித் தெளிப்பு முறைகளில், பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது. பூச்சிக்கொல்லித் தெளிக்கும்போது அதை தெளிப்பவர்கள் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆனால் ட்ரோன்களைப் பயன்படுத்தி தூரத்திலிருந்தே பூச்சிக்கொல்லித் தெளிப்பது மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பான ஒன்றாக இது அமைகிறது.
வழக்கமான பூச்சிக்கொல்லித் தெளிப்பு முறைகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியின் அளவைவிட, இதில் பாதி அளவு பயன்படுத்தினால் போதும். ஏனென்றால், ட்ரோன்களில் எந்தெந்த இடத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும் என முன்கூட்டியே சரியாக கணித்து விடுவதால், பூச்சிக்கொல்லி ட்ரோன்கள் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்குகிறது. தேவையில்லாத இடங்களுக்கு பூச்சிக் கொல்லித் தெளித்தலும் இதனால் கட்டுப்படுத்தப் படுகிறது. அதிகப்படியான ரசாயனப் பயன்பாட்டிலிருந்து இது விலகி இருப்பதால், விவசாய நிலப்பரப்புகளில் பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்க உதவுகிறது.
இது தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயத் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், இதன் விலைதான். தற்போது விவசாயிகளால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் இயந்திரப் பூச்சிக்கொல்லித் தெளிப்பான்கள் பத்தாயிரம் ரூபாய்க்குள்ளேயே வாங்கிவிடலாம். ஆனால் இந்த ட்ரோன் பூச்சிக்கொல்லித் தெளிப்பான்களின் விலை லட்சக்கணக்கில் இருக்கிறது. மேலும் இதை கையாளுவதற்கென்று சில தொழில்நுட்ப அறிவு வேண்டுமென்பதால், படிக்காத பாமர விவசாயிகள் இதை இயக்குவது சற்று கடினமாகும்.
இருப்பினும் இதை ஒரு தொழில் முயற்சியாகக் கையிலெடுத்து யாரேனும் நடைமுறைப்படுத்தலாம். அல்லது அரசாங்கம் நினைத்தால் கிராமத்திற்கு ஒரு ட்ரோனை வாங்கிக்கொடுத்து, அதை இயக்குவதற்கு நிரந்தரமாக பணியாளர்களை அமர்த்திவிட்டால், அந்த கிராமத்தில் உள்ள எல்லா விவசாய நிலத்திற்கும் ஒரு ட்ரோனைப் பயன்படுத்தி விரைவாகவும் எளிதாகவும் பூச்சிக்கொல்லித் தெளிக்க முடியும்.
இந்த மாற்றம் எதிர்காலத்தில் நிச்சயம் ஏற்படும் என எதிர்பார்க்கலாம். விவசாயத்துறையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே, அவர்களின் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது பலரின் கூற்றாக இருக்கிறது. எனவே விவசாயத்தில் இந்தப் பூச்சிக்கொல்லித் தெளிப்பான்களின் பயன்பாடு வரவேற்கத்தக்கதுதான்.