

போக்குவரத்து வசதிகளில் முதன்மை இடத்தில் இருப்பவை பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார், பேருந்து, ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களாகும். அன்றாடப் பயன்பாட்டிற்கு உதவும் இவை இயங்க அடிப்படைத் தேவையாக இருப்பது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களே. இவற்றின் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எப்போதும் மக்களிடையே இருந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 2024 மார்ச் 14 அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ₹2 குறைக்கப்பட்டது. அதன்பின் பெட்ரோல், டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில், பிப்ரவரி 1-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், பெட்ரோல், டீசல் அல்லது வீட்டுச் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரிகளில் (Central Excise Duty) ஏதேனும் மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டில் இதற்கான தனித் திருத்தங்கள் எதுவும் அறிவிக்கப்படாததால் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எவ்வித நேரடி மாற்றங்களும் இல்லாததால், தற்போது நடைமுறையில் உள்ள கலால் வரி நிலைகளே தொடர்கின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹2 வரை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் வாகன ஓட்டிகளின் சுமையைக் குறைக்கவும் உதவும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. பட்ஜெட்டில் இந்த அதிரடி விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனப் பலரும் நம்பியிருந்தனர்.
கடந்த காலங்களில், போர் அச்சங்கள் எண்ணெய் விலையை உயர்த்தின. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றங்கள் தணிந்து வருவதற்கான அறிகுறிகளால், கச்சா எண்ணெய் விலை சுமார் 5 சதவீதம் குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த விலைச் சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஈரான்-அமெரிக்க மோதல் ஏற்படும் என்ற அச்சத்தைத் தணித்துள்ளதால், சந்தைகள் மீண்டு எண்ணெய் விலைகள் சரிந்து வருகின்றன.
ஈரான் மீதான அச்சுறுத்தல் முழுமையாக நீங்கிவிட்டதா என்பதை உறுதிப்படுத்த இயலாது. இருப்பினும், தற்போதைக்கு மோதல் ஆபத்து குறைந்துள்ளதாகச் சந்தைகள் நம்புகின்றன. அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமாகத் தொடர்ந்து, பதற்றங்கள் தணிந்தால் எண்ணெய் விலைகள் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், உலகளாவிய எண்ணெய் விநியோகம் தற்போது போதுமான அளவில் உள்ளது. அமெரிக்க டாலர் மேலும் வலுப்பெற்றால், விலைகள் மேலும் குறையக்கூடும். இருப்பினும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் பதற்றங்கள் மீண்டும் அதிகரிக்கலாம். இதனால் குறுகிய காலத்தில் விலையில் ஏற்ற இறக்கங்கள் (Volatility) இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
உலகச் சந்தையில் எண்ணெய் விலை சரிந்தால், அதை இந்திய சந்தை விலையுடன் ஒப்பிட்டு மறு கணக்கீடு செய்யும்போது விலை குறையச் சாத்தியமுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி (GST) வரம்பிற்குள் கொண்டு வருவதும், மத்திய மற்றும் மாநில அரசுகள் வரிகளைக் குறைப்பதும் மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
தற்போதைய நிலவரப்படி புவிசார் அரசியல் அபாயங்கள், அணுசக்திப் பிரச்சனைகள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகியவை விலையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதே நேரத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதில்லை என 'ஒபெக்+' (OPEC+) நாடுகள் முடிவு செய்துள்ளதால், சந்தையில் விநியோகம் சீராக இருக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இது எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைய வழிவகுக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.