

இந்த வருடம் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தனித்தனியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தின.இந்த தாக்குதலில் ஈரான் பலத்த சேதத்தை சந்தித்தது. ஈரான் தனது சேதங்களுக்கு பழிவாங்க, உலகளாவிய எண்ணெய் சந்தைகளுடன் இணைக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியது.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் ஹோர்முஸ் ஜலசந்தி வழி ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெயை இந்தப் பகுதியின் மூலம் பயணம் செய்கிறது. இந்த வழியை மூடியதால் பல நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கடந்த வருடம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 அமெரிக்க டாலராக இருந்த நிலையில் , தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 114 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ளது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் பாதிக்கும் அதிகமாக விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளையும் வெகுவாக பாதித்தது.
இந்தியாவிலும் இதுபோன்ற சூழல்கள் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பெட்ரோல் , டீசல் விலை உயர்த்தப்படாமல் ஒரே அளவில் நிலையாக நீடித்து வருகிறது. ஆயினும் இந்தியாவில் உள்ள நயரா , ஷெல் உள்ளிட்ட தனியார் எண்ணெய் நிறுவனங்கள் தங்களது பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை, ₹20–₹25 வரை உயர்த்தி ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த விலை உயர்வு, போரின் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் அதற்காகவும், மேலும் தற்போது கப்பல் போக்குவரத்திற்கான செலவினமும் அதிகரித்துள்ளதால், பல நிறுவனங்கள் நஷ்டத்தினை ஈடு கட்டுவதற்கு எரிபொருள் விலைகளை கூட்டியுள்ளன.
மத்திய அரசைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் , ஏரிபொருள் விலையை உயர்த்தாமல் இருப்பதால் தற்போது தினசரி ₹2400 கோடி இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. பெட்ரோலுக்கு ₹20 இழப்பு ஏற்படுவதாகவும் டீசலில் ₹10 இழப்பு ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால் அரசு நிறுவனங்கள் எரிபொருள் விலை உயர்வை அறிவிக்காமல் இருப்பதாகவும் , தற்போது சட்டமன்ற தேர்தலில் இறுதியாக மேற்குவங்கத்தில் இறுதி கட்ட வாக்கு பதிவு நடைபெற்ற உடன் , எண்ணெய் நிறுவனங்கள் விலையேற்றத்தினை அறிவிப்பார்கள் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
நேற்று , பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் "மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை உயருமா? " என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் , பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த அரசுக்கு எந்தத் திட்டமும் இல்லை. வளைகுடா நாடுகளில் நடைபெறும் போரினால் கச்சா எண்ணெய் விலை 50% அதிகமாக உயர்ந்துள்ள போதிலும் , 4 வது ஆண்டாக சில்லறை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றமில்லாமல் நீடிக்கிறது , என்றார்.
அனைத்து மாநில அரசுகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம் , சில்லரை பெட்ரோல் பங்குகள் கண்காணிக்கப்படுகின்றன. நாடு முழுக்க எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. "எங்களிடம் எல்பிஜி, பெட்ரோல், டீசல் , விமான எரிபொருள்" ஆகியவை கையிருப்பில் உள்ளன. வதந்திகளை நம்பி பீதியுடன் எரிபொருட்கள் வாங்குவதை தவிர்த்து, அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள் அன்று சுஜாதா ஷர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.