‘பிச்சைக்காரன்’ படம் இயக்குனர் சசி எனக்கு போட்ட பிச்சை - விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி!

‘பிச்சைக்காரன்’ படம் இயக்குனர் சசி எனக்கு போட்ட பிச்சை - விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி!

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதன் புரமோஷன் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய விஜய் ஆண்டனி, இயக்குனர் சசி உட்பட திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது, “பெயர் தான் பிச்சைக்காரன். அனைத்து துறைகளிலும் இந்தப் படம் ரிச்சாக வந்திருக்கிறது. நல்ல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி ஏன் நடிக்க வந்திருக்கிறார் என்று நான் யோசித்திருக்கிறேன். பிச்சைக்காரன் படம் பார்த்த பிறகு நான் எண்ணியது தவறு என்பது புரிந்தது. பார்ப்பதற்கு அப்பாவியாக இருந்தாலும் படத்தில் மிரட்டியுள்ளார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனிக்கு இது இரண்டாவது வாழ்க்கை. பாத்திமாவின் பிரார்த்தனைகளோடு ரசிகர்களின் பிரார்த்தனையும் சேர்ந்து அவரைக் காப்பாற்றியிருக்கிறது. விஜய் ஆண்டனி இன்னும் நிறைய படங்கள் செய்வார். வெற்றி பெறுவார்.” என்றார்.

“‘பிச்சைக்காரன்’ படம் நீங்கள் எனக்கு போட்ட பிச்சை; இனி அப்படியொரு படம் எனக்கு கிடைக்காது” என இயக்குநர் சசியிடம் விஜய் ஆண்டனி கலங்கியபடி தெரிவித்துள்ளார். “டிஷ்யூம் படத்தில் நீங்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் என்னால் வந்திருக்க முடியாது. அதேபோல ‘பிச்சைக்காரன்’ படம் நீங்கள் எனக்கு போட்ட பிச்சை. இனி எத்தனை படங்களில் நடித்தாலும் ‘பிச்சைக்காரன்’ போல ஒரு படம் எனக்கு கிடைக்காது. அந்த கதையை நீங்கள் சொல்லும்போது எந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக சொன்னீர்கள் என்பது எனக்குத் தெரியும். படம் கொடுத்ததற்கு நன்றி.

‘பிச்சைக்காரன் 2’ படத்தை நீங்கள்தான் இயக்க வேண்டும் என காத்திருந்தேன். அதன்பிறகு வேறு வழியில்லாமல் படத்தை ஆரம்பித்தேன். இந்தப் படத்தின் மூலமாகத்தான் டைரக்‌ஷனை கற்றுக்கொண்டேன். ‘பிச்சைக்காரன்’ படத்தின் காப்பியாகத்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்.

இயக்குநர் சசி பேசுகையில், ‘பிச்சைக்காரன்’ படம் இயக்கிக் கொண்டிருந்தபோது நான் சாதாரணமாக வைத்த ஒரு காட்சியை புகழ்ந்து கூறியிருந்தார். படம் வெளியானபோது அந்தக் காட்சியை பலரும் கைதட்டி ரசித்தார்கள். அதுதான் அவரை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது. ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்க வேண்டும் என அவர் என்னிடம் கூறியிருந்தார். ஆனால், நான் வேறு படத்தை இயக்குவதால் இந்தப் படத்தை என்னால் இயக்க முடியவில்லை. ‘பிச்சைக்காரன் 2’ சிறப்பான படமாக வந்திருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com