அமெரிக்காவின் மூன்றாவது பழைமையான மருத்துவனை மாசசூசெட்ஸ். இந்த மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு பன்றியின் சிறுநீரகத்தை 62 வயதான ஒரு சிறுநீரக நோயாளிக்கு மாற்றிப் பொருத்தி சாதனைப் படைத்து இருக்கின்றனர். இது xenotransplantation மருத்துவத்தில் புதிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க அறுவை சிகிக்சையில், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் ரிச்சர்ட் ஸ்லேமேன் எனும் உயிருடன் இருக்கும் சிறுநீரக நோயாளிக்கு மாற்றி வைக்கப்பட்டது. கடந்த காலங்களில் மூளைச் சாவு அடைந்த நபர்களுக்கு மட்டுமே வைத்து இந்த அறுவை சிகிச்சை செய்து பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது முதல் முறையாக உயிருடன் இருக்கும் ஒரு நோயாளிக்கு இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018ம் ஆண்டு இதே மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஸ்லேமேன், சென்ற ஆண்டு மீண்டும் டயாலிசிஸ் போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டார். அதைத் தொடர்ந்து அந்த மருத்துவமைனை மருத்துவர்கள், பன்றியின் சிறுநீரகத்தை அவருக்குப் பொருத்தி மாற்று அறுவை சிகிச்சையை செய்துகொள்ள அவருக்கு முன்மொழிந்தனர்.
இது குறித்து, இந்த அறுவை சிசிச்சையை செய்துகொண்ட ஸ்லேமேன் கூறுகையில், “இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை எனக்கு மட்டும் உதவுவதற்கான ஒன்றாக நான் கருதவில்லை. உயிர் வாழ்வதற்கு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை வழங்கும் ஒரு தீர்வாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன்" என்று கூறி உள்ளார்.
மாசசூசெட்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் கடந்த வியாழனன்று, “ஸ்லேமேன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நன்றாக குணமடைந்து வருவதாகவும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறி இருக்கின்றனர். இந்த அறுவை சிகிச்சை எதிர்காலத்தில் இதுபோன்ற மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு நம்பகத்தன்மையை வழங்குவதாக அனைவராலும் கருதப்படுகிறது.
இந்த சாதனை மனித நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க விலங்கு செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஜீனோட்ரான்ஸ்பிளாண்டேஷனில் குறிப்பிடத்தக்க மைல் கல்லைப் பிரதிபலிக்கிறது. பன்றிகளின் மரபணு மாற்றங்கள் உட்பட, அவற்றின் உறுப்புகளை மனிதர்களுடன் மிகவும் இணக்கமாக மாற்றுவது உட்பட, சமீபத்திய முன்னேற்றங்கள், தானம் செய்யப்பட்ட உறுப்புகளின் முக்கியமான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நம்பிக்கையை இந்த அறுவை சிகிக்சை உருவாக்கி இருப்பதாக அனைவராலும் கருதப்படுகிறது.