

விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்களில் ரத்து மற்றும் தாமதங்களால் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரிலிருந்து வதோதரா புறப்பட இருந்த விமானம் ஒனறுக்குள் புறா ஒன்று பறந்துக் கொண்டிருந்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரிலிருந்து வதோதராவுக்கு செல்லவிருந்த இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு சற்று முன்னதாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவுகள் கூறுகின்றன.பொது மக்களிடையே வைரலாகி வரும் இந்த காணொளியில் அந்த புறா விமானத்தின் உட்புறத்தில் உள்ள பயணிகள் இருக்கைகளுக்கு மேலே அது வெளியேறுவதற்கான வழியைத் தேடிப் பறந்து கொண்டிருப்பதை பயணிகளால் காண முடிந்தது.
விமான ஊழியர்களும், சில பயணிகளும் ஒன்று சேர்ந்து அந்த பறவையை பிடிக்க முயன்றார்கள். இதனால் விமானத்தில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. இந்த புறா விமான நிலையத்தில் நுழைவாயில்கள் திறந்திருந்த போதோ அல்லது பயணிகள் ஏறும் போதோ அந்த விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த காணொளியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு பயணி,’விமானத்தில் ஒரு திடீர் விருந்தாளி’ என்ற தலைப்புடன் இந்த காணொளியை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு ஒரு புறம் ஆச்சரியத்தையும்,மற்றொரு புறம் அதிர்ச்சியையும் நமக்கு ஏற்படுத்துகிறது. இனி வரும் காலங்களில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படுவதை தவிர்ப்பதில் விமானத்துறை நிர்வாகங்கள் தீவிர கவனம் செலுத்துவது நல்லது.