ராஜஸ்தானில் பா.ஜ.க. நடத்தி வரும் ஜன ஆக்ரோஷ் யாத்திரை தொடரும். அதை சஸ்பெண்ட் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா இன்று தெரிவித்தார்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எனவே யாத்திரை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும், அரசியலைவிட மக்களின் உடல் நலன் பெரிது என்பதாலும் முதல்வர் அசோக் கெலோட்டுக்கு எதிரான ஜன ஆக்ரோஷ் யாத்திரை நிறுத்திவைக்கப்படுகிறது என்று பா.ஜா.க. பொது செயலாளர் அருண் சிங் முன்னதாக கூறியிருந்தார். அவ்வாறு அவர் கூறிய சில மணி நேரங்களில், சதீஷ் பூனியா யாத்திரை தொடரும் என தெரிவித்துள்ளார் இது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெலோட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நான்கு ஆண்டு பதவிக்காலத்தை பூர்த்தி செய்துள்ள நிலையில், காங்கிரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் யாத்திரையை கடந்த 1 ஆம் தேதி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கிவைத்தார்.
கொரோனா பரவலை சுட்டிக்காட்டி ராகுலின் ஒற்றுமை யாத்திரையை நிறுத்துமாறு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டாவியா வலியுறுத்தியதை அடுத்து குழப்பமான நிலையை ஏற்பட்டது. ராகுல் யாத்திரையை நிறுத்த வலியுறுத்தும் நீங்கள் பா.ஜ.க. யாத்திரையை நிறுத்தத் தயாரா என முதல்வர் அசோக் கெலோட் கேள்வி எழுப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.