நாயக்கர் கால நினைவுக் கல்லுக்கு வழி வழியாக வழிபாடு!

நாயக்கர் கால நினைவுக் கல்லுக்கு வழி வழியாக வழிபாடு!
Published on

மது மூதாதையரின் நினைவுப் பொக்கிஷங்களை அவ்வப்போது வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அவற்றை அரசிடம் ஒப்படைத்து பாதுகாத்து வருகின்றனர். அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்கள் மூலம் பண்டைய கால வரலாற்றை நம்மால் அறிய முடிகிறது.

சேலம் மாவட்டம் வரலாற்று ஆய்வு மையத்தினர் சேலம் சுற்றியுள்ள பகுதிகளில் குழுவாக சென்று ஆராய்ந்து கல்வெட்டு நினைவுக் கற்கள் போன்ற பல வரலாற்று  சான்றுகளை கண்டறிந்துள்ளனர். தற்போது அவர்கள் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கிராமத்தில் 300 ஆண்டு பழமையான நாயக்கர் கால நினைவுக் கல் ஒன்றை கண்டறிந்து உள்ளனர். பேளூரைச் சேர்ந்த ஊர் மணியக்காரர் திருமூர்த்தி கொடுத்த தகவலின் பேரில், சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பெ.பெரியார்மன்னன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் சி.பொன்னம்பலம், செ.ஜீவநாராயணன் ஆகியோர் கொண்ட குழுவினர், பேளூர் வசிஷ்ட நதிக்கரையோரத்தில்,  திருமூர்த்தி விவசாய நிலத்தில், 300 ஆண்டுகள் பழமையான  நாயக்கர் கால  நினைவுக்கல்  ஒன்று இன்றளவும் வழிபாட்டில் இருந்து வருவதைக் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது, "சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூரை தலைமையிடமாகக் கொண்டு, 300 ஆண்டுகளுக்கு முன்,  நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்கள் என குறிப்பிடப்படும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். வாழப்பாடி பகுதியிலுள்ள சின்னமநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், ராமநாயக்கன்பாளையம், லட்சுமணசமுத்திரம், சின்னமசமுத்திரம் ஆகிய ஊரின் பெயர்களும், இப்பகுதியில் கண்டெக்கப்பட்ட நடுகற்கள், கல்வெட்டுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

இப்பகுதியில் சிவாலய திருப்பணிகள் செய்ததோடு, வசிஷ் நதியில் இருந்து வாய்க்கால்கள் வெட்டி, ஏரி, குளங்களும் அமைத்து நீர் மேலாண்மை செய்துள்ளனர்.  இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டு,  தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள  சின்னம நாயக்கர் மற்றும் இலட்சுமண நாயக்கர் நடுகற்களும், இவர்களது பெயரிலுள்ள ஊர்கள் மற்றும் ஏரிகளும் இதனை உறுதி செய்கின்றன. சேலம்  வரலாற்று ஆய்வு மையத்தினர்,  3 ஆண்டுகளுக்கு முன், பேளூரில் நாயக்கர் கால வரலாற்று சிறப்பு மிக்க  மூக்கறுப்புப் போர் கல்வெட்டை கண்டறிந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது பேளூரில் வசிஷ்டநதிக்கரையில் மணியக்காரர் திருமூர்த்தி விவசாய நிலத்தில் கண்டறியப்பட்டுள்ள  இந்த நினைவுக்கல் நாயக்கர் காலத்தை சேர்ந்ததாகும். 300 ஆண்டு பழமையான இந்த நினைவுக் கல்லில்  ஆணும், பெண்ணும் தம்பதியாய்  இரு கைகூப்பி சிவலிங்கத்தை வணங்குவதைப்போல சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த நினைவுக்கல்லில் இருக்கும் தம்பதி, சின்னம நாயக்கர் வம்சா வழியைச் சேர்ந்த பாளையக்காரர்களாக இருக்கலாம். சிவன் கோயிலுக்கு பொன், பொருள் தானம் கொடுத்ததையோ, கோயில் திருப்பணி மேற் கொண்டதையோ  நினைவு கூர்ந்து இந்த நினைவுக்கல் வைக்கப்பட்டிருக்கலாம்". என்றனர்.
இதுகுறித்து பேளூர் மணியக்காரர் திருமூர்த்தி "பேளூர் பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்களான பாளையக்காரர்களை எங்களது மூதாதையர்களாக கருதுகிறோம். எங்களது தோட்டத்திலுள்ள இந்த  நினைவுக்கல்லை, முன்னோர்களின் வழியில் தொடர்ந்து 300 ஆண்டுகளுக்கு மேலாக குலதெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறோம்." என்றார்.

நமக்குப் பின் வரும் நமது சந்ததியினர் முன்னோரின் வரலாறுகளை அறிந்து கொள்ள உதவுகிறது. இது போன்ற நினைவுக் கற்களும் அகழ்வாய்வுகளும் உதவுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com