மதுவைக் காட்டிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் மாத்திரைகள்! மருந்துக் கடைகளுக்கு எச்சரிக்கை...

மதுவைக் காட்டிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் மாத்திரைகள்!
மருந்துக் கடைகளுக்கு எச்சரிக்கை...

திகப்படியான போதையைத் தேடி உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்ளும் இளைஞர்கள் தற்சமயம் நாடுவது வலி நிவாரண மாத்திரைகளை என்பது கவலைக்குரிய விஷயமாகிறது. இந்த இளைஞர்களுக்கு எப்படி கிடைக்கிறது அந்த மாத்திரைகள்? இதனால் என்ன விபரீதங்கள் விளையும்?.

      போதைக்காக மதுவை மட்டுமின்றி தூக்க மாத்திரை உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரைகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர் சேலம் இளைஞர்கள் என்பது அதிர்ச்சியைத் தருகிறது. மேலும், ஒரு சில மருந்து கடைகளில் உரிய ரசீதுகள் இல்லாமல் வலி நிவாரணி மருந்துகளை அதிகளவில் விற்பனை செய்யப் படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சேலத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மருந்து கடைகளில் சோதனைகளை. நடத்தி வருகின்றனர்.

       இளைஞர்கள் வலி நிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே செல்லும் நிலையைத் தடுக்க அவற்றை விற்கும் கடைகள் மீது வழக்கு பதிவு செய்வது மட்டுமின்றி, கடையின் உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் “சேலம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிப்பையும் மீறி ஒரு சில மருந்து கடைகள் வலி நிவாரண மருந்து மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் பரிந்துரை இன்றி  கடைகளில் மருந்து கொடுக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கடைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு கடையின் உரிமத்தை  ரத்து செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே டாக்டரின் பரிந்துரை இன்றி வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது” என்று எச்சரித்துள்ளனர்.

இது குறித்து சேலத்தில் மருந்துகள் விற்பனை பிரதிநிதியாக பணியில் இருக்கும் கலைக்குமார் பாண்டுரங்கன் கூறும் கருத்து:

கலைக்குமார் பாண்டுரங்கன்
கலைக்குமார் பாண்டுரங்கன்

பொதுவாக மது ஏற்படுத்தும் பாதிப்பை விட அதிக உடல் நலப் பாதிப்பை ஏற்படுத்துவது இந்த வலி நிவாரணிகளே என்கின்றனர் மருத்துவர்கள். மதுவின் போதை ஆல்கஹால் உடலில் இருக்கும் வரை மட்டுமே. ஆனால், தொடர்ந்து ஒரு வாரம் நீங்கள் வலி நிவாரணிகளை எடுக்கும்போது உங்களை அறியாமலே அதற்கு அடிமையாகி விடும் வாய்ப்பு உண்டு. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மதுவின் விலை அதிகம் என்பதால் அதை விடக் குறைவான இது போன்ற மலிவு விலை மருந்து தரும் போதைகளை இளைஞர்கள்  நாடுகின்றனர் .

    மேலும், பொதுவாகவே எந்த ஆங்கில மருந்துகளும் சிறிதாவது பின்விளைவு ஏற்படுத்தும் என்பதே உண்மை. போதை என்பது ஒரு மனிதனைச் சீரழித்து அவன் உடல் நலனைச் சிதைத்து விடும். ஒரு மருத்துவப் பிரதிநிதியாக மருத்துவருக்குத் தேவைப்படும் மருந்துகளைத் தந்தாலும் சக மனிதராக மருந்து ஆய்வாளர்கள் கொண்டு வந்துள்ள போதைக்கு எதிரான மருந்து கட்டுப்பாடு நடவடிக்கையை வரவேற்கிறேன். மருத்துவரின் ஒப்புகை சீட்டு இல்லாமல் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். இதை ஒவ்வொரு மருந்துக்கடை நிறுவனர்களும் நினைவில் கொள்ளவேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com