வேலை வாய்ப்பு முகாமும்... வழிகாட்டு நெறிகளும்.

வேலை வாய்ப்பு முகாமும்... வழிகாட்டு நெறிகளும்.

ரசுத்துறை மற்றும் தனியார்துறை இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்களின் மூலம் பலர் தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பினைப் பெற்று வாழ்வாதாரம் பெற்று மகிழ்கின்றனர். சென்ற மாதம் ஒரு தனியார் கல்லூரியில் அரசு மற்றும் தனியார் ஃபவுண்டேசன் நடத்திய முகாமில் கலந்து கொண்டு சுமார் 300 க்கும் மேற்பட்டோர் பணி வாய்ப்பினைப் பெற்றது சேலம் மக்களை ஆச்சர்யப்படுத்தியது. ஆனால் இது போன்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வேலைவாய்ப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

     மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு மாதத்திலும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகின்றனர். இதில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும்  ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இந்த முகாமில் கலந்து  வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு குறைவான மாத சம்பளம் அளிப்பதாக புகார் எழுந்த நிலையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் துணை இயக்குனர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

     இதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் துணை இயக்குனர் கூறியதாவது “ஒவ்வொரு மாதத்திலும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறு அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இதில் வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் வழங்க வேண்டும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களிடமிருந்து பயிற்சி, சீருடை, காலணி என இவற்றிற்கான எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது, பணியில் சேர்ந்தவர்களின் விபரத்தையும் இரண்டாம் நிலை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய விபரத்தையும் 15 நாட்களுக்குள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். பணி நியமனம் பெற்றவர்களின் விவரம் தெரிவிக்காத நிறுவனங்கள் அடுத்தடுத்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க முடியாது. ஒவ்வொரு நிறுவனத்தில் இருந்தும் இரண்டு ஹெச் ஆர் கள் முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

      மேலும் வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாடு தனியார் துறை வேலை வாய்ப்பு  www.tnprivatejobs.in.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதேபோல் வேலைவாய்ப்பு தேடும் நபர்களும் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

     வழிகாட்டு நெறிகளை பின்பற்றி வேலை வாய்ப்பு  முகாமில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்கள் இந்த ஆலோசனைகளை கடைபிடித்தால் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com