‘முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் இன்ப சுற்றுலா:’ முதல்வர் வெளிநாடு பயணம் குறித்து எடப்பாடி விமர்சனம்!

‘முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் இன்ப சுற்றுலா:’ முதல்வர் வெளிநாடு பயணம் குறித்து எடப்பாடி விமர்சனம்!

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் அதிபர்களைச் சந்திக்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் இன்று ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில் முதலமைச்சரின் பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வாயிலாகத் தனது கருத்தைத் தெரிவித்து இருக்கிறார்.

அந்த அறிக்கையில் அவர், “அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களைத்தான் கடந்த இரண்டு வருடங்களாக, இன்று வரை திமுக அரசு தாங்கள் செய்ததாகக் கூறி வருகிறது. புதிதாக எந்த ஒரு வெளிநாட்டு ஒப்பந்தமும் இந்த ஆட்சியில் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமக்களுக்கு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், புதிய திட்டங்களையும் தொடங்காமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆட்சிக்கு வந்தவுடன் தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாகக் கூறி, தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய்க்கு இன்பச் சுற்றுலா சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒருசில நிறுவனங்களுடன் தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாக அறிவித்தார். இது நடந்து முடிந்து 700 நாட்கள் கடந்து விட்டன. இதுவரை எந்த முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் ஏற்கெனவே குடும்பத்துடன் துபாய் இன்பச் சுற்றுலாவை மேற்கொண்ட திமுக அரசின் முதலமைச்சர் இப்போது, மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா? அல்லது முதலீடு செய்யப் போகிறாரா? என்று தமிழக மக்களும் சமூக ஊடகங்களும் கேள்வி எழுப்பியுள்ளன” என்று அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com