

ஆசியாவின் மிகப்பெரிய வற்றாத ஜீவநதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா. அஸ்ஸாம் மாநிலத்தின் முதன்மை ஆறான இது, சில இடங்களில் 10 கிலோமீட்டர் வரை அகலமுடையது. பொதுவாக இந்தியாவில் ஆறுகளுக்குப் பெண் பெயரிடும் வழக்கம் இருந்தாலும், இந்த ஆறு மட்டும் பிரம்மன் மகனாகக் கருதப்பட்டு 'ஆண்' பெயரில் அழைக்கப்படுவது இதன் சிறப்பாகும்.
அஸ்ஸாமின் தலைநகர் கௌஹாத்தி மற்றும் வடக்கு கௌஹாத்திக்கு இடையில் பிரம்மபுத்ரா ஆறு பாய்கிறது. இந்த இரு பகுதியையும் இணைக்கும் வகையில் ரூபாய் 3 ஆயிரத்து 30 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் 6 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் கௌஹாத்தி சென்ற பிரதமர் மோடி அவர்கள் (14.2.2026) மேம்பாலத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அஸ்ஸாம் கவர்னர் லட்சுமன் பிரசாத், முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உட்பட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவிற்கு பிறகு பிரதமர் மோடி அவர்கள் பாலத்தில் நடந்து சென்றார்.
இமயமலையில் உருவான பிரம்மபுத்திரா ஆறு அருணாச்சல பிரதேசம், அசாம், வங்காளதேசம் வழியாக கடலில் கலக்கிறது. இதனிடையே அஸ்ஸாமின் தலைநகர் கௌஹாத்தி மற்றும் வடக்கு கௌஹாத்திக்கு குறுக்கே இந்த ஆறு பாய்கிறது. இந்த இரு பகுதியையும் இணைத்து மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 6 வழிச்சாலை கொண்ட இந்த குமார் பாஸ்கர் வர்மா சேது(Kumar Bhaskar Varma Sethu) பாலம் வடகிழக்கு பிராந்தியத்தின் முதல் Extradosed பாலமாகும். கௌஹாத்தி மற்றும் வடக்கு கௌஹாத்தியை இணைக்கும் இப்பாலத்தின் மூலம் இரு பகுதிகளுக்கும் இடையிலான பயண நேரம் 60 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாகக் குறைந்துள்ளது.
அசாமின் தலைநகர் பகுதியில் நகர்ப்புற இயக்கத்திற்கான ஒரு பெரிய மேம்படுத்தலாக இது பாராட்டப்படுகிறது. அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் கூற்றுப்படி இந்த பாலம் ஆரம்பத்தில் பாதசாரிகளுக்காக திறக்கப்படும். போக்குவரத்து அமைப்புகள் நடைமுறைக்கு வந்தவுடன் மார்ச் 1 முதல் வாகனங்கள் அனுமதிக்கப்படும். இப்பாலம் வடக்கு கவுஹாத்தியில் உள்ள தேசிய நிறுவனங்கள், கலாச்சார அடையாளங்கள் மற்றும் புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு எளிதான அணுகலை வழங்குகிறது. வணிகங்களை பொறுத்தவரை பயண நேரம் குறைவதும், தினசரி பயணிகளுக்கு போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் நேரமும் குறையும்.
இந்தப் பாலத்திற்கு இப்பகுதியில் செழிப்பை ஏற்படுத்தியதாக அறியப்படும் குமார் பாஸ்கர் வர்மாவின் பெயரிடப்பட்டுள்ளது. பிரதான பாலத்தின் நீளம் 1.24 கிலோமீட்டராகும். மேலும் இது 8.4 கிலோ மீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய இணைப்பு வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என்பதால், இதனைத் தாங்கும் வகையில் உராய்வு ஊசல் தாங்கிகள்(Friction Pendulum Bearings) மற்றும் நிகழ்நேர பால ஆரோக்கிய கண்காணிப்பு அமைப்பு(BHMS) போன்ற தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.