சமீபத்தில் பிரேசில் நாட்டுக்கான பார்லிமெண்ட் தேர்தல் நடைபெற்றது. அதில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ வெற்றி பெற்றார். தற்போதைய அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். இதனையடுத்து பிரேசில் நாட்டின் புதிய அதிபராக லூயிஸ் இனாசியோ பதவியேற்றுக்கொண்டார். பெற்ற வாக்குகளின் வித்தியாசம் மிகவும் குறைவாக இருந்ததால் அந்தத் தோல்வியை போல்சனேரோவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் போல்சனேரோ. ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் பிரேசில் பார்லிண்ட் வளாகத்தில் நுழைந்து வன்முறைத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்கு இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர், ஐ.நா., பொதுச்செயலாளர் போன்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமது கண்டனத்தில் பிரதமர் மோடி, “பிரேசிலில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசில் அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம்” எனக் கூறியுள்ளார்.
அதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது அறிக்கையில், “பிரேசில் நாட்டின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலையும் அதிகாரத்தை மாற்றுவதையும் கண்டிக்கிறேன். பிரேசிலின் ஜனநாயக நிறுவனங்களுக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. அவர்களின் விருப்பத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தக் கூடாது. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் தொடர்ந்து பணியாற்ற நான் ஆவலுடன் உள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸும் பிரேசில் பார்லிமென்ட் தாக்குதலுக்கு தமது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.