

நாட்டின் முதல் அதிவேக மண்டல போக்குவரத்து அமைப்பான(RRTS) 'நமோ பாரத்'(Namo Bharat) ரயில்களை, டெல்லி-மீரட் இடையிலான 82 கி.மீ. வழித்தடத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது வழக்கமான மெட்ரோவை விட அதிவேகமானது. மணிக்கு180 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில், 82 கி.மீ. தொலைவை வெறும் 55 நிமிடங்களில் கடந்து பயண நேரத்தை வெகுவாக குறைக்கிறது. இதுவே சாலை மார்க்கமாக சென்றால் இதற்கு 3 மணி நேரம் ஆகும்.
சதாப்தி நகர் நிலையத்திலிருந்து இந்தியாவின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை மற்றும் மீரட் மெட்ரோ சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பயண நேரம் மற்றும் கூட்ட நெரிசலை குறைப்பதற்கு, நகர்ப்புற போக்குவரத்தில் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட பிராந்திய போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் இந்த நமோ பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.
70 கி.மீ. தொலைவுக்கு மேல்மட்ட பாலத்திலும் 12 கிலோமீட்டர் தூரம் சுரங்கப்பாதையிலும் பயணிக்கும் இந்த ரயில் மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட வழித்தடத்தில் பயணிக்கிறது. குளிரூட்டப்பட்ட பெட்டிகள், வைஃபை, சிசிடிவி, மாற்றுத்திறனாளிகளுக்கான இடவசதி மற்றும் பயணிகளுக்கான நவீன தகவல் அமைப்பு போன்ற வசதிகள் இதில் உள்ளன. பீக் ஹவரில் 5-10 நிமிடங்களுக்கும், சாதாரண நேரத்தில் 10-15 நிமிடங்களுக்கும் ஒரு முறை நமோ பாரத் இயக்கப்படும். 3 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 173 இருக்கைகள் உட்பட மொத்தம் 700க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது. இப்படி ஒரே வழித்தடத்தில் இரண்டு இரு வேறு அதிவேக ரயில்களை(நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ) பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்-புஜ் நகரங்களுக்கு இடையே நமோ பாரத் விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர், அடுத்த கட்டமாக டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை 82 கிலோமீட்டர் தூரத்தை இணைக்கும் அதிவேக ரயில் சேவையை தொடங்கி வைத்தார். டெல்லியின் சராய் காலே கான் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மீரட்டில் உள்ள மோடிபுரம் ரயில் நிலையத்துக்கு இந்த அதிவேக ரயில் சேவையின் மூலம் 55 நிமிடங்களில் சென்றடையலாம்.
இந்த அதிவேக ரயில் சேவை டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.