2024ல் பிரதமர் மோடியின் அரசியல் பயணம் எவ்வாறு இருக்கும்?

PM MODI
PM MODI

ந்தியாவின் 14-வது பிரதமராக பதவியேற்று அதைத் தொடர்கிறார். 2001 முதல் 2014 வரை குஜராத் மாநில முதலமைச்சராக பணியாற்றியவர். வாராணசி மக்களவைத் தொகுதி உறுப்பினர். பா.ஜ.க. தலைவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணுக்கத் தொண்டர். தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான்.

நரேந்திர மோடி 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வாட்நகரில் மளிகைக் கடைக்காரர்களின் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி மற்றும் அவரது தாயார் பெயர் ஹிராபென் மோடி, தம்பதியருக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேரில் மூன்றாமவர் நரேந்திர மோடி.  தனது குழந்தைப் பருவத்தில், வாட்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்பதில் தனது தந்தைக்கு உதவிய மோடி, பின்னர் தனது சகோதரனுடன் பேருந்து நிலையத்திற்கு அருகில் டீக்கடை நடத்தி வந்தார்.

1967 இல், அவர் தனது உயர்நிலைக் கல்வியை வாட்நகரில் முடித்தார்.  17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி அடுத்த இரண்டு வருடங்கள் நாடு முழுவதும் பயணம் செய்தார். இந்த இரண்டு ஆண்டுகளில் சுவாமி விவேகானந்தர் நிறுவிய பல ஆசிரமங்களுக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.1971-ம் ஆண்டு தனது 21-வது வயதில் முறையாக ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்ந்தார். அந்த தொடர்பு அவரது அரசியல் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தில்லி பல்கலைக்கழகத்தில் திறந்தநிலை கற்றல் பள்ளியில் அரசியல் அறிவியலில் இளங்கலை கலைப் பட்டம் பெற்ற அவர், பின்னர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றதாக கூறப்படுகிறது.சவால்களை நேர்மறையாக எடுத்துக் கொண்டு அதை தனக்கு கிடைத்த வாய்ப்புகளாகக் கருதி  தைரியத்துடன் எதிர்கொண்டார். இதுவே அவரின் அரசியல் பாதைகளில் வெற்றியைத் தேடித்தந்தது.

முதல் அடி முற்றிலும் வெற்றி

இந்தியாவின் 14-வது பிரதமராக பதவிவகிக்கும் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, 2014 தேர்தலில் பாஜகவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றவர்.  ஒரு ஆச்சர்யமான தகவல் என்னவெனில், அவர் முதல்முறையாக எம்எல்ஏ ஆன போதே குஜராத் முதல்வரானவர். அதேபோலவே முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான போதே பிரதமர் ஆனார்.

1984-க்குப் பிறகு மக்களவையில் பெரும்பான்மை அரசாக 2014ல் பாஜக அரசு அமைத்த பெருமை இவரையே சாரும்.நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்துவது, நேரடி அன்னிய முதலீடுகளை பெருக்குவதற்கான விதிகளை தளர்த்துவது என பல்வேறு சீர்த்திருத்தங்களை இவரது அரசு மேற்கொண்டது.

மோடியின் ஆட்சி காலத்தில்தான் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தார். குஜராத் கலவரங்களுக்கு மோடிதான் காரணம் என்ற கருத்தால் அமெரிக்கா அவருக்கு விசா வழங்காமல் இருந்த்து. பின்னர். இந்த தடை நீக்கப்பட்டபின் பிரதமர் மோடி, நியூயார்க் சென்று அமெரிக்க அதிபர் பராக் ஓபாமாவை சந்தித்தார்.

இந்து கலாசார மேம்பாடு, பசுவதை தடுப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள், என பரவலான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஹவாலா பணத்தை ரொக்கமாக மாற்றும் வழிகள் கடினமாக்கப்பட்டன. ஜிஎஸ்டி வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

எனினும இத்தகைய நடவடிக்கைகளால் பாதிப்புகள் இல்லாமல் இல்லை. வளர்ச்சி விகிதம் குறைந்தது. விலைவாசி உயர்ந்து, வேலையின்மையும் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் இரண்டாவது கட்ட ஆட்சியில்தான் அதாவது 2019 இல் ஜம்மு காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கச் செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370 வது பிரிவு ரத்துச் செய்யப்பட்டது. இது பலரின் விமர்சனங்களுக்கு உள்ளான போதிலும், நீதிமன்றம், மோடி அரசின் செயல் சரியானதுதான் என தீர்ப்பளித்தது.

 Corona
Corona

2020 இல் கோவிட் தொற்று அதிகரித்திருந்து காலத்தில் அதை எதிர்த்துப் போராட தீர்க்கமான முடிவெடுத்தார். தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. குறுகிய காலத்தில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போட்டதன் மூலம் தொற்றுப் பரவலின் தாக்கம் குறைந்தது. 2023 இல் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடி கடுமையாக பிரசாரம் செய்த போதிலும் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற முடியவில்லை. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

எனினும் சமீபத்தில் நடைபெற்ற ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத்தள்ளி இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த்து. இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரமும் அவர் வகுத்துக் கொடுத்த தேர்தல் உத்திகளும்தான்.

2024 பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க பிரதமர் மோடி தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். கடந்த 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு பா.ஜ.க. தலைவர்களை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதேநேரத்தில்  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரண்டு பா.ஜ.க.வை வெளியேற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

பிரதமர் மோடிக்கு வடமாநிலங்களில் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தென் மாநிலங்களில் அவருக்கும் பா.ஜ.க.வுக்கும் எதிர்பார்த்த ஆதரவு இல்லை. ஆனாலும், எதிர்ப்பு அலைகளை சமாளித்து மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று அரசியல் நோக்காளர்கள் கூறிவருகின்றனர். பிரதமர் மோடியின் வெற்றிப் பயணம் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com