பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண மோடி வலியுறுத்தல் – கனடா பிரதமருடன் கூட்டறிக்கை..!

PM Modi Canadian PM Mark Carney
PM Modi Canadian PM Mark Carney
Published on

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவுகிற பதட்டங்கள் குறித்து , இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச்.2) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் நாட்டிற்கு எதிராக தொடங்கிய ராணுவ நடவடிக்கையில் , ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து உருவாகி வரும் சூழலை குறித்து மோடி கவலை தெரிவித்தார்.

கனடா பிரதமர் கார்னியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய இந்தியப் பிரதமர், "உலக நாடுகளில் நிலவும் பதட்டங்கள் பற்றி இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. உலக அமைதி மற்றும்

ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம், இந்தியா கனடா போன்ற இரண்டு ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து நிற்கும்போது, ​​அமைதிக்கான குரல் இன்னும் வலுவடைகிறது" என்று மோடி கூறினார்.

மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை எங்களுக்கு கவலையளிப்பதாக இருக்கிறது.

அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் சுமூகமாக முடிக்க இந்தியா ஆதரவு அளிக்கும்.

தீவிரவாதம் இந்தியா- கனடா நாடுகளுக்கு மட்டுமல்ல , மனிதகுலத்திற்கே கடினமான சவாலாக இருக்கின்றன. என்று இரு நாட்டு பிரதமர்களும் எடுத்துரைத்தனர். மேலும் அமீரகம் மீதான தாக்குதலுக்கு மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியக் குடிமக்களை மீட்க வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டார்.

மத்திய கிழக்கில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்:

ஈரான் உச்சத்தலைவர் கமெனியின் கொலையை தொடர்ந்து , அமெரிக்காவின் ராணுவத்தளங்கள் அமைந்துள்ள அரபு நாடுகளை, ஈரான் தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்த தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகம், துபாய், பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகள் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மட்டுமல்லாமல் லெபனான் , சிரியா போன்ற நாடுகளையும் தாக்கி வருகின்றனர்.

இந்த நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை உள்ளது. மேற்காசிய நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுடன், இந்திய தூதரகங்கள் தொடர்பில் உள்ளன. குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அந்த பிராந்தியத்தில் உள்ள இந்திய சமூக உறுப்பினர்களுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அங்குள்ள இந்தியர்களை தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

போரினைத் தொடர்ந்து அரபு நாடுகளில் உள்ள வான்வெளி மூடப்பட்டுள்ளதால் , துபாய் விமான நிலையத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த 90 மாணவர்கள் சிக்கித் தவிப்பதாக கூறப்பட்டிருந்தது. இவர்கள் துபாயில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் , அவர்கள் பாதுகாப்புடன் இருப்பதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் வீட்டில் பாதுகாப்பு ஆலோசனை:

இந்திய பிரதமரின் இல்லத்தில் , இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் போர் தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்க பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் பிரதமரின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் அங்கு நிலைமை மோசம் அடைந்தால், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து , இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com