

தமிழக மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை , பிப் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது, என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக கூறப்பட்டிருந்தது. அதன்படி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு மதுரை வந்த பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கலை நாட்டினார்.
இதே காலக்கட்டத்தில் மத்திய அரசு அடிக்கல் நாட்டிய பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டப்பட்டு , மக்கள் பயன்பாட்டிற்கும் வந்தது. ஆனால் , மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டிடம் மட்டும் நீண்ட காலமாக எந்த ஒரு பணியும் நடைபெறாமல் அப்படியே இருந்தது. இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது , மத்திய அரசு சார்பில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஆவதாக கூறப்பட்டது. இந்நிலையில் 2024 மே மாதம் , எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டு ,அதிலிருந்து வேகமாக நடந்து வந்தது.
இந்த மருத்துவமனை மொத்தமாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 782 சதுர அடி பரப்பளவில், சுமார் ₹2021 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. முதற்கட்ட வளாகப் பணிகளுக்காக இதுவரை 1.05 லட்சம் சதுர அடி பரப்பரவில் கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த கட்டிடங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பசுமை வளாகமாக IGBC Gold Rating பெறும் வகையில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் எரிசக்தி சேமிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பில் முன்னுதாரணமாக இருக்கும். இந்தக் கட்டிடப் பகுதிகளில் எய்ம்ஸ் நிர்வாகப் பிரிவு , மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி மற்றும் வெளிநோயாளி சிகிச்சைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்காக தயாராக உள்ளது.
இந்த மருத்துவமனையில் மக்களுக்கு தேவையான பல சிறப்பு மருத்துவ பிரிவுகள் உள்ளது. கார்டியாலஜி, நியூரோ சர்ஜரி , எலும்பியல் உட்பட சுமார் 20 க்கும் மேற்பட்ட உயர் சிகிச்சை பிரிவுகள் செயல்பாட்டிற்கு வர உள்ளது. மொத்தமாக கட்டிட பணிகள் நிறைவடையும் பொழுது 900 படுக்கைகள் கொண்டதாக மருத்துவமனை செயல்படும். இதில் 150 படுக்கைகள் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்கப்படும். இதன் மூலம் மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் , சிகிச்சைக்காக வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது.
எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. மதுரையில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதால் , இந்த மாணவர்கள் அனைவரும் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். தமிழகத்தில் தேர்தல் ஜுரம் பரவி வரும் வேளையில் , எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். அதன் பின்னர் மருத்துவமனையின் இரண்டாம் கட்ட பணிகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பிற்கு பின்னர் மதுரை தென் மாவட்டங்களில் சிகிச்சை மையமாக மாறும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.