மணிப்பூரை விட இஸ்ரேல் மீதுதான் பிரதமர் மோடிக்கு அக்கறை: ராகுல் கடும் தாக்கு!

மணிப்பூரை விட இஸ்ரேல் மீதுதான் பிரதமர் மோடிக்கு அக்கறை: ராகுல் கடும் தாக்கு!

ணிப்பூர் வன்முறையை விட, இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பிரதமர் நரேந்திர மோடி அதிக அக்கறை காட்டி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார். மிசோரம் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இரண்டு நாட்கள் பயணமாகச் சென்றுள்ள ராகுல் காந்தி பேசுகையில், “மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது குறித்து கவலைப்படாமல் இருக்கும் பிரதமர் மோடியும் அவரது அரசும், இஸ்ரேல் போரில் கவனம் செலுத்துவது வியப்பளிக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் தாம் மணிப்பூருக்கு சென்று வந்ததை குறிப்பிட்ட ராகுல்காந்தி, அங்கு நடந்ததை தம்மால் நம்பமுடியவில்லை என்றார். மணிப்பூரை பாஜக அரசு சீர்குலைத்துவிட்டது. அது ஒரு மாநிலமாக இல்லை. அந்த மாநிலம் இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது என்றும் கூறினார். மணிப்பூரில் மெய்டீஸ் மற்றும் குக்கி சமூகத்துக்கு இடையே நடந்துவரும் மோதலை அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

மணிப்பூரில் மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். ஆனால், அங்கு சென்று என்ன நடக்கிறது என்று பார்க்க பிரதமர் மோடிக்கு நேரமில்லை என்றார்.

மணிப்பூரில் கடந்த மே மாதத்திலிருந்து வன்முறை நடந்து வரும் இடத்துக்கு பிரதமர் சென்று பார்க்க முடியாதது வெட்கக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டார். மணிப்பூரில் வன்முறை என்பது பிரச்னையின் ஆரம்பம்தான். இந்தியா தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. நாட்டு மக்கள் மீது அடக்குமுறை கையாளப்படுகிறது என்றும் ராகுல் கூறினார். நாட்டின் பாரம்பரியம், மதம், கலாசாரம், மொழி இவற்றை பாதுகாக்கும் நோக்கிலேயே காங்கிரஸ் கட்சி சார்பில் தாம், ‘பாரத் ஜடோ யாத்திரை’ (ஒற்றுமை யாத்திரை) சென்றதாகவும் ராகுல் குறிப்பிட்டார். முன்னதாக, அய்ஸ்வாலில் சான்மரி ஜங்ஷனிலிருந்து ராஜ்பவன் வரை அவர் பாத யாத்திரை சென்றார்.

மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com