ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி!

ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி!

இரயில் விபத்தால் ஏற்பட்ட வேதனை குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை என விபத்து நிகழ்ந்த இடத்தில் நேரில் பார்வையிட்ட பின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அங்கு தற்போது மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

ஒடிசாவின் பாலசோர் நகருக்கு அருகே உள்ள பஹனஹா பஜார் ரயில் நிலையப் பகுதியில் நேற்று மாலை 7 மணி அளவில் இந்த ரயில் விபத்து நேரிட்டது. 3 ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில் இன்று (ஜூன் 3) நண்பகல் 2 மணி நிலவரப்படி 288 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 747 பேர் காயமடைந்திருப்பதாகவும், இவர்களில் 56 பேர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ரயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

பின்னர் டெல்லியில் இருந்து புறப்பட்டு ஒடிசா வந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பஹனஹா பஜார் ரயில் நிலையப் பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு இருந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பிரதமரை விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். விபத்துப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், விபத்துக்கான காரணம் குறித்தும் பாதிப்பு குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் விளக்கினர்.

இந்நிலையில், ரயில் விபத்து நடந்த பகுதியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். அவருடன் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடனிருந்தனர். அதன் பின் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அதன் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி “விபத்தால் ஏற்பட்ட வேதனை குறித்து விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. விபத்து தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. விபத்துக்கு காரணமானவர்களுக்கு உரியத் தண்டனை வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com