பிரதமர் மோடி நேற்று மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜயினி மகா காலேஸ்வரர் கோயிலுக்கு சென்று மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். அவருடன் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் சென்றனர்.
உலகப் புகழ்பெற்ற உஜ்ஜயினி மகாகாலேஸ்வரர் கோயிலை ரூ. 850 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் முதற்கட்டமாக ரூ. 316 கோடி ரூபாய் செலவில் அக்கோயில் வளாகம் சீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அக்கோயிலில் 108 தூண்கள், அலங்கார திரிசூல வடிவமைப்பு, சிவலிங்கம் மற்றும் நீரூற்று ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை, வேதமந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது, அங்கு வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.
பின்னர் தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது;
இந்தியா எப்போதும் உலகளாவிய கலாசாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும். அதேசமயம் நம் நாட்டின் கலாசாரத்தையும் பேணிக் காக்கும். அந்த வகையில் இந்தியாவின் ஆன்மீக உணர்வை வலுப்படுத்தும் வகையில் உஜ்ஜயினி மகா காலேஸ்வரர் கோயில் உள்ளிட்ட ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் உள்ளன. இத்தகைய ஆன்மீக தலங்களின் பெருமையை மீட்டு எடுக்கும் பணியில் மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது.
-இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.