
சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) ஒரு பொற்கால வாய்ப்பு! நிதி பற்றாக்குறையால் கனவுகள் கலைந்து போகிறதா? கவலை வேண்டாம்! மத்திய அரசு கொண்டு வந்த இந்த திட்டம், உங்களுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடனும், 35% வரை மானியமும் தருகிறது. இளைஞர்களையும், குறிப்பாக பெண்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினரையும் தொழில்முனைவோராக மாற்ற இந்த திட்டம் பக்கபலமாக நிற்கிறது.
PMEGP திட்டம் என்றால் என்ன?
2008 ஆகஸ்ட் 15 முதல் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையகத்தால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், பிரதம மந்திரி ரோஜ்கர் யோஜனா மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது. உற்பத்தி துறையில் ரூ.50 லட்சம் வரையும், சேவை துறையில் ரூ.20 லட்சம் வரையும் கடனாகப் பெறலாம். மேலும், கிராமப்புறங்களில் 35% மானியமும், நகர்ப்புறங்களில் 25% மானியமும் கிடைக்கும். இதன் மூலம், கிராமப்புற இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்கு இடம்பெயர்வது தடுக்கப்படுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
18-35 வயதுடைய பொதுப்பிரிவினரும், 18-45 வயதுடைய சிறப்பு பிரிவினரும் (எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், முன்னாள் ராணுவத்தினர்).
மற்ற மத்திய/மாநில அரசு திட்டங்களில் மானியம் பெறாதவர்கள்.
தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைகளும் தகுதியுடையவை.
நிதி உதவி எப்படி?
உற்பத்தி துறை: ரூ.50 லட்சம் வரை கடன்.
சேவை துறை: ரூ.20 லட்சம் வரை கடன்.
மானியம்: கிராமப்புறத்தில் பொதுப்பிரிவினருக்கு 25%, சிறப்பு பிரிவினருக்கு 35%; நகர்ப்புறத்தில் பொதுப்பிரிவினருக்கு 15%, சிறப்பு பிரிவினருக்கு 25%.
விண்ணப்பதாரர் பங்களிப்பு: கிராமப்புறத்தில் 10% (பொதுப்பிரிவு) அல்லது 5% (சிறப்பு பிரிவு); நகர்ப்புறத்தில் 15% (பொதுப்பிரிவு) அல்லது 5% (சிறப்பு பிரிவு).
ரூ.10 லட்சம் வரை கடனுக்கு பிணையம் தேவையில்லை.
தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை, பான் கார்டு, சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரேஷன் கார்டு.
திட்ட அறிக்கை (Project Report).
தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி (EDP) சான்றிதழ்.
வங்கி கணக்கு விவரங்கள், கிராமப்புற சான்றிதழ், உறுதிமொழி பத்திரம் (ரூ.20 முத்திரைத்தாளில்).
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் https://www.kviconline.gov.in/ இணையதளம் வழியாகவோ அல்லது மாவட்ட தொழில் மையங்கள், காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய அலுவலகங்களிலோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் சமர்ப்பித்த 5 நாட்களுக்குள் அதிகாரிகள் தொடர்பு கொள்வார்கள்.
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, 30 நாட்களுக்குள் வங்கியில் கடன் தொகை வரவு வைக்கப்படும்.
EDP பயிற்சி கட்டாயம்
ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவாகும் தொழிலுக்கு 10 நாட்கள் EDP பயிற்சி கட்டாயம். ஆனால், ஏற்கனவே 60 மணிநேர ஆன்லைன் அல்லது 10 நாட்கள் ஆஃப்லைன் பயிற்சி பெற்றவர்கள் மீண்டும் பயிற்சி எடுக்க வேண்டியதில்லை.
ஏன் இந்த திட்டம் சிறப்பு?
PMEGP தொழில்முனைவோருக்கு நிதி மட்டுமல்ல, கனவுகளுக்கு சிறகு முளைக்க வைக்கிறது. பெண்கள், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் இதன் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, பொருளாதாரத்தில் புதிய உயரங்களை எட்டுகின்றனர்.
இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கி, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க இந்தத் திட்டம் வழிவகுக்கிறது.இப்போது காத்திருக்காமல், உங்கள் தொழில் கனவை நனவாக்க PMEGP-யைப் பயன்படுத்துங்கள்!