நெய்வேலியில் பாமக நடத்திய போராட்டத்தில் கலவரம், கல்வீச்சு, வாகனங்கள் உடைப்பு, வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அமைந்துள்ள என்.எல்.சி தொழிற்சாலையில் இரண்டாவது விரிவாக்க பணிக்காக விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என் எல் சி வாயில் முன் 2000க்கும் மேற்பட்டோர் கூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அன்புமணி ராமதாஸ் பேசிக் கொண்டிருந்த பொழுது காவல்துறையினர் மீது பாமகவினர் கல்லை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கைது செய்வதற்கான வாகனங்கள் வரவேற்கப்பட்டு அன்புமணி ராமதாஸ் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார். அப்பொழுது அன்புமணி ராமதாஸ் ஏற்றப்பட்ட வாகனத்தை சுற்றி கூடிய பாமகவினர் பஸ் கண்ணாடியை உடைத்து அன்புமணியை செல்ல விடாமல் தடுத்தனர். இதைத்தொடர்ந்து வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்ட பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசியும், பஸ் கண்ணாடிகள் உடைத்தும், தெருவிளக்குகளை உடைத்து உடைத்தும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசாரின் வஜ்ரா வாகனங்கள் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் அடிக்கப்பட்டு கலைக்கப்பட்டனர். மேலும் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போதும் கலவரம் கட்டுக்குள் வராததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர்.
இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது. மேலும் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டு, போராட்டக்காரர்கள் மாவட்டத்திற்குள் நுழையாத வண்ணம் கூடுதல் போலீசார் மற்ற மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டு இருக்கின்றனர்.