69% இட ஒதுக்கீடு ஆபத்தில் இருப்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் – அன்புமணி..!

Caste census Meeting
PMK and common party
Updated on

சென்னை தியாகராய நகரில் , பாமக சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நடைபெறும் கூட்டத்திற்கு, அதன் தலைவர் அன்புமணி மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் தவெக , பாஜக, தவாக , அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 69% இட ஒதுக்கீட்டினை பாதுகாக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கை கூட்டத்தில் , தவெகவின் மாநில செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன் பேசுகையில் , "சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள தமிழக வெற்றி கழகம், தனது முதல் தேர்தல் வாக்குறுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, விகிதாச்சார பிரதிநிதித்துவம் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்" என்று அறிவித்திருந்தது. கர்நாடகாவில் சமீப காலத்தில் இருமுறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கிறது.

அதனைப் பின்பற்றி தமிழகமும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சரியான முறையில் இந்த கணக்கெடுப்பை நடைமுறைப்படுத்துவது அவசியம். எதிர்காலத்தில் 69% இட ஒதுக்கீட்டிற்கு நீதிமன்றத்தின் மூலம் தடை வருவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் ,இந்த இட ஒதுக்கீடை தற்போது பாதுகாப்பதன் அவசியத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

வலிமையான தரவுகள் இருக்கும் பட்சத்தில் தற்போது உள்ள இட ஒதுக்கீடு முறை தொடரும். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளை உச்சநீதிமன்றம் கேட்ட போது, மாநில அரசுகள் அதுபோன்ற சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை வைத்திருக்காததால், வன்னியர் சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இது மட்டுமல்லாது மராட்டா மற்றும் ஜாட் சமூகத்தினரின் இட ஒதுக்கீடுகளும் ரத்தானது.

தவெக அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தை சார்ந்த 8 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது அரசியலில் செய்யப்பட்ட மிகப்பெரிய சமூகநீதி புரட்சி. இதைப் போன்று தமிழக அரசு விரைவில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வெளியிட்ட அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், குறிப்பிட்ட பிரிவில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை பொதுவாக கணக்கெடுக்க கூடாது , என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி "மத்திய அரசாங்கம் மிகப்பெரிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் முறைகளை செய்கிறது. அதனால் மாநில அரசு தான் தீவிரமாக ஆராய்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இந்த கணக்கெடுப்பின்போது சமூகத்தின் பொருளாதார நிலை, சாதி வழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற தரவுகள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் , சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இது சம்பந்தமாக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்" . இந்த கூட்டம் முடிந்ததும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் , அன்புமணியை ஃபோனில் அழைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரும் பாமக மற்றும் அனைத்து கட்சிகள் இணைந்து எடுத்த முடிவிற்கு திமுக ஆதரவளிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com