

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.இந்த பரபரப்பான சூழலில் சேலத்தில் இன்று (டிச.29) பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4 ஆயிரத்து 300 பேர் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது
சேலம் ரத்தினவேல் மண்டபத்தில் நடைபெற்று வரும் பா.ம.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்காக மதிய உணவு 7,000 பேருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை டாக்டர் ராமதாஸ் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சேலத்தில் பொதுக்குழு கூட்டம் சற்று முன் தொடங்கியது. இதில், பாமக தலைவராக இருந்த அன்புமணியின் பதவி காலம் கடந்த 28ம் தேதியுடன் முடிந்ததால், புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கௌரவத் தலைவராக ஜி.கே.மணி, ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி, கட்சியின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளராக முரளி சங்கர் ஆகியோரை அங்கீகரித்து பாமக பொதுக்குழுவில் தீர்மானம்.பின்னர் "துரோகத்தை வீழ்த்துவோம், ராமதாஸின் கரத்தை வலுப்படுத்துவோம்" என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து சௌமியா அன்புமணியை நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.