தனிநபர் சட்டங்களை விட போக்சோ சட்டமே உயரியது: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!

போக்சோ சட்டம்
போக்சோ சட்டம்
Updated on

சமீபத்தில் ஊடகங்களிலும் நீதிமன்ற விவாதங்களிலும்,'முஸ்லிம் தனிநபர் சட்டம்' மற்றும் 'போக்சோ (POCSO) சட்டம்' ஆகியவற்றிற்கு இடையே நடக்கும் சட்ட மோதல்கள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

குறிப்பாக, சில ஆங்கில தேசிய நாளிதழ்களில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் திருமண வழக்கை அடிப்படையாகக் கொண்டு, "18 வயதுக்குக் குறைந்த சிறுமிக்குத் தனிநபர் சட்டப்படி (Personal Law) திருமணம் செய்யலாமா?" என்ற விவாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம் வரை சென்றதை நாம் பார்த்தோம்.

முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு பெண் பூப்படைந்த உடனே (Puberty) அவளுக்குத் திருமணம் செய்து வைக்க அவளது பெற்றோருக்கு உரிமை உண்டு என்ற வாதத்தை முன்வைத்து, போக்சோ சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கப் பல குடும்பங்கள் முயல்கின்றன. ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்றம் தன் தீர்ப்பில் இதை அடியோடு நிராகரித்தது.

இந்தச் சட்டச் சிக்கல் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமேயானது அல்ல; நமது சமூகத்தில் இன்றும் ஏழ்மையைப் பயன்படுத்தியோ, "சொந்தம் விட்டுப் போகக்கூடாது, சொத்து கைமாறக் கூடாது" என்ற பேராசையிலோ பதினெட்டு வயதுக்குக் குறைவான சிறுமிகளுக்கு ரகசியமாகத் திருமணங்கள் நடத்தப்பட்டுத்தான் வருகின்றன. இவர்களும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

உதாரணமாக, இந்து திருமணச் சட்டம், 1955-ன் பிரிவு 11 மற்றும் 12-ன் படி, 18 வயதுக்குக் குறைவான ஒரு சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டால், அந்தத் திருமணம் குற்றமாகக் கருதப்பட்டாலும் அது தானாகவே செல்லாததாக (Void) மாறிவிடாது. அந்தப் பெண் 18 வயதை அடைந்த பிறகு, குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றத்திற்குச் சென்று முறையிட்டால் மட்டுமே அதை ரத்து செய்ய முடியும்.

அதேபோல, நமது நாட்டின் குற்றவியல் சட்டங்களில் (பழைய ஐ.பி.சி 375, தற்போதைய பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 63), "திருமண பந்தத்திற்குள் நடக்கும் உடலுறவு கற்பழிப்பு குற்றத்தின் கீழ் வராது" என்ற ஒரு சட்டப்பூர்வ விதிவிலக்கும் (Marital Rape Exception Rule) நீண்ட காலமாக விவாதத்தில் உள்ளது. குற்றவாளிகள் இந்தச் சிவில் சட்டங்களின் ஓட்டைகளையும், விதிவிலக்கு விதிகளையும் காட்டித் தங்களுக்குச் சாதகமாக வாதாட முற்படுகிறார்கள்.

போக்சோ சட்டத்தின் முன்னால் மற்ற சட்டங்கள் செல்லாது!ஆனால், இந்த அனைத்துச் சட்ட ஓட்டைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதுதான் போக்சோ சட்டம் (POCSO Act, 2012). அலகாபாத் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உணர்த்தும் மிக முக்கியமான தாரக மந்திரம் இதுதான்:

"நாட்டின் எந்தவொரு தனிநபர் சட்டமோ (Personal Law), ஊர் வழக்கமோ, இந்து திருமணச் சட்டப் பிரிவுகளோ அல்லது குற்றவியல் சட்டத்தின் 'விதிவிலக்கு விதிகளோ' இந்தியாவின் போக்சோ சட்டத்திற்கு முன்னால் செல்லுபடியாகாது!"

What the POCSO Act says about sexual crimes
What the POCSO Act says about sexual crimes

பாதிக்கப்பட்ட பெண் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, 18 வயதுக்குக் குறைவான ஒரு சிறுமியைக் கட்டாயத் திருமணம் செய்து, அவளது விருப்பமின்றி உடலுறவு கொண்டால் அது போக்சோ சட்டப் பிரிவு 4 மற்றும் 6-ன் கீழ் 'சட்டப்பூர்வ கற்பழிப்பு' (Statutory Rape) என்றே கருதப்படும்.

ஒரு சிறுமியின் உடல் சார்ந்த பாதுகாப்பையும் அடிப்படை உரிமையையும் நசுக்க எந்தவொரு சிவில் அல்லது தனிநபர் சட்டத்திற்கும் அதிகாரம் இல்லை. குற்றம் என்று வந்துவிட்டால் இந்தியக் கிரிமினல் சட்டம் அனைத்து மதத்தினரையும் ஒரே தராசு கொண்டுதான் எடை போடுகிறது. போக்சோ சட்டம் என்பது அனைத்துப் பெண் குழந்தைகளையும் பாதுகாக்கும் ஒரு மதச்சார்பற்ற இரும்புக் கோட்டை.

குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கடுமையான பிரிவுகள் மூலமாக மட்டுமே இந்தச் சமூக அவலங்களைத் தடுக்க முடியும். ஊடகங்கள் ஒரு வழக்கின் மதப் பின்னணியை மட்டும் விவாதிப்பதைக் கடந்து, இந்தியச் சட்டம் அனைத்துப் பெண்களையும் சமமாகப் பாதுகாக்கிறது, மற்ற எந்தச் சட்டங்களை விடவும் போக்சோ சட்டம் மிக உயரிய அதிகாரம் கொண்டது என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதுவே இந்தியப் பெண் குழந்தைகளுக்குக் கிடைக்கும் உண்மையான விடியல்!

இதையும் படியுங்கள்:
OTT ரிலீஸ் : பாண்டிராஜின் 'பரிமளா & கோ', சன்னி தியோலின் 'இக்கா' உட்பட 3 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்!
போக்சோ சட்டம்
logo
Kalki Online
kalkionline.com