அண்ணாமலையார் கோயில் நிலத்தை ஆக்கிரமித்த பாஜக பிரமுகரை தேடுகிறது போலீஸ்!

அண்ணாமலையார் கோயில் நிலத்தை ஆக்கிரமித்த பாஜக பிரமுகரை தேடுகிறது போலீஸ்!
Published on

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் அருகே உள்ள அம்மணி அம்மன் மடத்தின் 23,800 சதுர அடி இடத்தை பாஜகவின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் ஆக்கிரமித்து வீட்டைக் கட்டியிருந்தார். அந்த வீட்டை இந்து சமய அறநிலையத் துறை கடந்த 18ம் தேதி இடித்து அகற்றியது. இதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், ’தொன்மையான அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டது, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறிய செயல்’ எனக் கூறி, தனது ஆதரவாளர்களுடன் பாஜக வழக்கறிஞர் சங்கர் கடந்த 19ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஆகியோரை மிகவும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இது குறித்து, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) வே.குமரேசன் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், 'வட ஒத்தவாடை தெருவில் உள்ள 23,800 சதுரடி இடம், அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமானது. இந்த இடத்தை சட்ட விரோதமாக டி.எஸ்.சங்கர் ஆக்கிரமித்திருந்தார். அந்த வீடு, கடந்த 18ம் தேதி அகற்றப்பட்டது. இந்நிலையில் டி.எஸ்.சங்கர், செங்கம் அஜித்குமார், கீழ்நாத்தூர் வெங்கடேசன், தேனிமலை காளியப்பன், கார்த்தி, ஏழுமலை உள்ளிட்டோர் கடந்த 19ம் தேதி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக நுழைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைத் தடுத்து நிறுத்தினர். அதோடு, துறை ஊழியர்களை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். மேலும், அங்கு நடப்பட்டியிருந்த எல்லைக் கல்லை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்பேரில் திருவண்ணாமலை நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாஜக வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இதில், காளியப்பன், ஏழுமலை, கார்த்திக் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், வழக்கறிஞர் சங்கரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் நா.முருகானந்தம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ’சுயநலத்துக்காக மடத்தின் நிர்வாகிகளை ஏமாற்றி வழக்கறிஞர் டிஎஸ் சங்கர் வீடு கட்டிக் கொண்டார். அவரது தவறை இந்து முன்னணி சுட்டிக் காட்டியபோது திருத்திக் கொள்ளவில்லை. இதனால், இந்து முன்னணி மாவட்ட பொறுப்பில் இருந்து சங்கர் நீக்கப்பட்டார். சங்கரின் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றியதை இந்து முன்னணி மனப்பூர்வமாக பாராட்டுகிறது. இந்த மடத்தின் தொன்மையைக் காப்பாற்ற வேண்டும். மடத்தின் வரலாறு தெரியாமலும், பெருமை தெரியாமலும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிக்கை விடுத்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com