சென்னை வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை புதிய உத்தரவு!

சென்னை வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை புதிய உத்தரவு!
Published on

சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனங்களில் அதிவேகமாகச் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பது, வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் இன்று போக்குவரத்து காவல் துறைக்கு உபகரணங்கள் வழங்கும் விழா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்து, காவல் உபகரணங்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “சென்னையில் பகல் நேரத்தில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில்தான் வாகனங்களை இயக்க வேண்டும். அதேபோல், இரவு நேரங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில்தான் இயக்க வேண்டும். இதை மீறி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்” என அவர் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறார்.

அதேபோல், வேகமாகச் செல்பவர்களை ஸ்பீடு ரேடார் வைத்தும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கேமரா வைத்துக் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, சாலைகளின் அனைத்து சந்திப்புகளிலும், நெடுஞ்சாலைகளில் முக்கியமான இடங்களில் கேமரா பொருத்தப்படும். போக்குவரத்து போலீசார் தங்களின் உடலில் கேமரா பொருத்திக்கொள்ள வேண்டும். அதன் மூலம் போக்குவரத்து விதி மீறல்கள் ரெக்கார்ட் செய்யப்படும். போக்குவரத்து காவல் வாகனங்களின் டாஷ்போர்டில் இனி கேமரா இருக்கும். இதனால் போலீஸ் சேசிங் அல்லது இரவு நேர ரோந்துகளில் போலீஸ் முக்கிய விஷயங்களை ரெக்கார்ட் செய்ய முடியும். மேலும், வாகனங்கள் சாலைகளில் வேகமாகச் செல்லும்போது அதை எளிதாகக் கண்டுபிடிக்க தானியங்கி வண்டி எண் அறியும் தொழில்நுட்பம் கொண்ட சென்சார்கள் ஒவ்வொரு சந்திப்புகளிலும் பொருத்தப்படும்.

சாலைகளில் பல்வேறு விதிமீறல் செய்பவர்களை கேமரா மூலம் கண்காணித்து, அவர்களின் வாகன நம்பர் பிளேட்டை வைத்து தானாக அபராதம் விதிக்கும் நடைமுறையும் கொண்டு வரப்பட உள்ளது. இந்த அபராதத்தை போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே விதிக்க முடியும். உங்களை அவர்கள் பார்க்கக் வேண்டிய அவசியம் இல்லை. அதாவது, நீங்கள் சாலையில் ஹெல்மெட் இன்றி செல்கிறீர்கள். போலீசார் சாலையில் இல்லை என்றாலும் கேமரா உங்களைப் பதிவு செய்யும். பின்னர் பைக் நம்பரை வைத்து உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சென்னையில் உள்ள இந்த விதிமுறை தமிழ்நாடு முழுவதும் கொண்டு வரப்பட உள்ளது. மெயில், போன் மெசேஜ் மூலம் இந்த அபராத செல்லான் செலுத்தப்படும்.

சாலைப்போக்குவரத்தில் செய்யப்பட்டு இருக்கும் இந்த மாற்றத்தைப் போலவே, போக்குவரத்து குற்றங்கள் மற்றும் விதி மீறல்களுக்கான அபராதத் தொகைகளிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம். இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும். அது மாதிரியே, தீயணைப்பு வண்டி, அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், தேவையின்றி ஹார்ன் அடித்தால் ஆயிரம் ரூபாய் அபராதம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமின்றி, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் துறையின் மூலம் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com