புற்றுநோயிலிருந்து மீண்ட போலீஸ் நாய்: மீண்டும் பணிக்கு திரும்பியது!

புற்றுநோயிலிருந்து மீண்ட போலீஸ் நாய்: மீண்டும் பணிக்கு திரும்பியது!

பஞ்சாப் போலீஸில் துப்பறியும் பிரிவில் பணியாற்றிய நாய் புற்றுநோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளது.

சிம்மி என்னும் பெயருடைய லாபரடார் வகையைச் சேர்ந்த நாய், துப்பறியும் பிரிவில் பணியாற்றிவந்தது. மர்ம பொருள்கள் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தாலோ அல்லது சதிவேலைகள் நடந்திருப்பதாகத் தெரியவந்தாலோ அதைக் கண்டுபிடிப்பதிலும் குற்றவாளிகளை பிடிப்பதிலும் இந்த நாய் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த்து.

துப்பறியும் நாய் சிம்மிக்கு புற்றுநோய் இருப்பதாகத் தெரியவந்தது. இதனால் வழக்கமான பணியில் ஈடுபடாமலும், சரிவர சாப்பிடாமல் உடல் மெலிந்தும் காணப்பட்டது. இந்த நிலையில் அந்த நாய்க்கு சிகிச்சை அளிக்க பஞ்சாப் போலீஸார் முடிவு செய்தனர். மருத்துவர்களின் சிகிச்சைக்கு பலன் கிடைத்து இப்போது அந்த நாய் குணமடைந்துள்ளது.

நீண்டநாட்களாக சிகிச்சை பெற்றுவந்த துப்பறியும் நாய் சிம்மி, குணமடைந்ததை அடுத்து மீண்டும் துப்பறியும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான விடியோ ஒன்றை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் டுவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளது. அதில் அந்த நாய், போலீஸ் வாகனத்திலிருந்து கீழிறங்கி, நடந்து சென்று வழக்கமான துப்பறியும் பணியில் ஈடுபட்டது. அந்த நாயை ஒருவர், தோலிலான் ஆன வார்பட்டையுடன் இழுத்துச் செல்வதையும் பார்க்க முடிந்தது.

இது தொடர்பாக பரீத்கோட் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஹர்ஜித்சிங், “புற்றுநோயால் பாதிக்கப்பட்ட துப்பறியும் நாய் சிம்மி நீண்டகாலமாக உயிருக்கு போராடி வந்தது. எனினும் டாக்டர்கள் அளித்த சிகிச்சை மூலம் சிம்மியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒருமுறை வெளிநாட்டினர் ஒருவர் வைத்திருந்த போதைப் பொருளை கண்டுபிடிக்க இந்த நாய் உதவியுள்ளது என்று குறிப்பிட்டார்.

புற்றுநோயை வீழ்த்தி மீண்டும் பணிக்கு திரும்பிய சிம்மிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

“வெல்கம் பேக் சிம்மி” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “மீண்டும் சிம்மி துப்பறியும் பணியில் ஈடுபட்டது மகிழ்ச்சியளிக்கிறது” என்று மற்றொருவர் கூறியுள்ளார். புற்றுநோயை வென்ற லாப்ரடார் வகை நாயான சிம்மி என்றுமே ஹீரோதான் என்று மூன்றாமவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

சிம்மி புற்றுநோயிலிருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பும் வரை அந்த நாயை கவனித்துக் கொண்ட பஞ்சாப் போலீஸ் துப்பறியும் படைப்பிரிவினருக்கு “சல்யூட்” என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயை எதிர்த்து போராடி சிம்மி குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டாலும், 12 வயதான எல்லா என்ற பெயருடைய நாய்க்கு அந்த அதிர்ஷமில்லை. வாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நாய் படும் துயரத்தை காணமுடியாமல் அதனை பல ஆண்டுகளாக வளர்த்து வந்த எடின்பர்கைச் சேர்ந்த சாரா கெய்த் என்பவர், அந்த நாய் மேலும் துன்ப்ப்படாமல் சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இதற்காக எல்லாவை கிழக்கு யார்க்ஷயரில் உள்ள ப்ரைஸ்த்ரோப் கடற்கரையில் கடைசியாக ஒரு முறை நடைபயணமாக அழைத்துச் செல்ல தீர்மானித்து தனது நண்பர்களுக்கு அதுபற்றி தகவல் கொடுத்தார். பெரும்பாலானவர்களால் வரமுடியாவிட்டாலும் சிலர் அதில் பங்கேற்றனர். கடைசியில் அந்த நாய் இறந்துவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com