சேவலை இரண்டு நாட்கள் சிறையில் அடைத்த போலீசார்!

சேவலை இரண்டு நாட்கள் சிறையில் அடைத்த போலீசார்!

தெலங்கானா மாநிலம், பூரெட்டிப்பட்டி கிராமத்தின் அருகே சிறுவன் ஒருவன், தன்னோடு ஒரு சேவலை கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறார்கள் அந்த கிராம மக்கள். அந்த சிறுவன் சேவலை திருடிக்கொண்டு செல்கிறான் என நினைத்த அவர்கள், சேவலோடு அவனையும் பிடித்து ஜூட்சர்லா காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். அந்த சிறுவன் மிகவும் சிறு வயதாக இருந்ததால், அவனது பெற்றோர்கள் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு அவனது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

அதையடுத்து, சேவலை என்ன செய்வது எனப் புரியாமல் தவித்தனர் போலீசார். அந்த சேவலுக்கு உரிமைக் கொண்டாடிக்கொண்டு யாரும் வராததால், அதை வெளியே விட்டால் நாய் போன்ற விலங்குகளால் ஆபத்து ஏற்படும் எனக் கருதி, அந்த சேவலை இரண்டு நாட்களுக்கு சிறையில் வைத்து பராமரிப்பதென முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அந்த சேவலை சிறையில் அடைத்த போலீசார், அதற்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீருக்கு ஏற்பாடு செய்து இருக்கின்றனர். இதுகுறித்து அந்தக் காவல் நிலைய அதிகாரியிடம் விசாரித்தபோது, ‘சேவலின் பாதுகாப்பு கருதியே அதை சிறையில் அடைத்து வைத்திருப்பதாக’க் கூறி இருக்கிறார்.

இதுவரை குற்றம் செய்த மனிதர்கள் மட்டுமே அடைபட்டிருக்கும் அந்த காவல் நிலையத்தின் கம்பிகளுக்கு பின்னால் எந்தக் குற்றம் செய்யாமல் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறது அந்த சேவல். இந்த நிலையில், வெவ்வேறு விஷயங்களுக்காக இந்த காவல் நிலையத்துக்கு வருகை தரும் பொதுமக்கள் சிறையில் அடைபட்டிருக்கும் அந்த சேவலை மிகவும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். சேவல் ஒன்று போலீஸ் நிலைய லாக்கப்பில் வைக்கப்பட்டிருக்கும் செய்தி அப்பகுதி மக்களால் மிகவும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com