500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் குடும்பத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்!

500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் குடும்பத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்!
Published on

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் ரூ.500 நோட்டு கட்டுகளுடன் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி படத்தை வெளியிட்டதால் தற்போது சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் என்னுமிடத்தில் போலீஸ் நிலைய அதிகாரியாக பணியாற்றிவருபவர் ரமேஷ் சந்திர சஹானி. இவரின் மனைவி, தனது குழந்தைகளுடன் ரூபாய் 500 நோட்டுக் கட்டுகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த ரூபாய்களின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் என்று சொல்லப்படுகிறது.

சமூக வலைத்தளத்தில் வெளியான அந்த படத்தில் போலீஸ் அதிகாரி ரமேஷின் மனைவி மற்றும் குழந்தைகள் படுக்கை மீது சொகுசாக அமர்ந்திருக்க அருகில் ரூ.500 நோட்டுக்கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் உடனடியாக ரமேஷ் சந்திர சஹானியை போலீஸ் லைன் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் ரமேஷ் சந்திர சஹானி தமது வீட்டாரின் செயலை நியாயப்படுத்தி உள்ளார். அதாவது அந்த படம் கடந்த 20121 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி எடுக்கப்பட்ட படம் என்றும் அதில் இடம்பெற்றுள்ள நோட்டு கட்டுகள் குடும்ப சொத்தை விற்றதன் மூலம் கிடைத்த பணம் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரூபாய் நோட்டு கட்டுகளுடன் போலீஸ் அதிகாரி ரமேஷின் குடும்பத்தினர் செல்ஃபி எடுத்து வெளியான படம் அதிர்ச்சியை அளித்ததாகவும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதேபோல கொரோனா தொற்றுக்காலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் “போலீஸார் பணம் பெற்றுக்கொண்டால் வேலையை கச்சிதமாக முடித்து விடுவார்கள்” என்று பேசியது விடியோ வைரலாக சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் போலீஸ் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “போலீஸார் லஞ்சம் வாங்குவதை ஒப்புக்கொண்டார். போலீஸார் எந்த ஒரு காரியத்துக்காக பணம் வாங்கினாலும் அதை கச்சிதமாக முடித்துவிடுவார்கள் என்று பேசினார். போலீஸ் துறையை போல சிறந்த துறை ஏதும் இல்லை. வேறு ஏதாவது துறையில் நீங்கள் பணம் கொடுத்தால் பணத்தை அதிகாரிகள் வாங்கிக் கொள்வார்களே தவிர சொன்னபடி வேலை நடக்காது, ஆனால், நாங்கள் அப்படியல்ல, பணம் வாங்கினால் சொன்னதை நிறைவேற்றுவோம்” என்று பேசியது விடியோவாக சமூக வலைத்தளத்தில் வைரலானது.இதையடுத்து பிகாபூர் மாவட்ட ஆட்சியர் அந்த போலீஸ் அதிகாரி மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com