காவல்துறை அதிகாரியின் மனைவியைக் கட்டிப்போட்டு நகை பணம் கொள்ளை.

காவல்துறை அதிகாரியின் மனைவியைக் கட்டிப்போட்டு நகை பணம் கொள்ளை.
Published on

சென்னை காவல் துறை அதிகாரியின் மனைவியைக் கட்டிப்போட்டு நகை பணத்தைக் கொள்ளையடித்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் காவல்துறையிடம் சிக்கியது எப்படி தெரியுமா?

சென்னை அரும்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் 72 வயதான கங்கா. இவருடைய கணவர், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் உமா சங்கர் காலமானதால், தன்னுடைய மகனுடன் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை கங்கா வீட்டில் தனியாக இருந்தபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் உள்ளே சென்று, அவரை கட்டிப்போட்டு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த 40 சவரன் நகைகள் மற்றும் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்ததோடு, கங்காவையும் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். 

இதைப் பற்றி காவல்துறையிடம் தெரிவித்தால் வீட்டில் உள்ள அனைவரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி, நகை பணத்துடன் தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து கங்கா அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் கண்ட போலீசார் அவர்களில் ஐந்து பேரை கைது செய்தனர். 

அவர்கள், அரும்பாக்கம் பிரகதீஸ்வரர் நகரைச் சேர்ந்த 35 வயதான மணிகண்டன் அவருடைய நண்பர்களான கீழ்கட்டளையைச் சேர்ந்த துரைசிங்கம், நன்மங்கலம் ரமேஷ், பல்லாவரம் மணிகண்டன் மற்றும் துரைப்பாண்டி என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் பிரகதீஸ்வரர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் கங்காவின் மகன் மகாதேவ் பிரசாத் நடத்தி வரும் ட்ரேடிங் கம்பெனியில் பணி செய்துவந்துள்ளார். 

அவருக்கு ஏழு மாதமாக சம்பளம் வழங்காத காரணத்தால், ஆத்திரமடைந்து தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து மகாதேவ் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார். பின்னர் அனைவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு அவர் வீட்டில் இல்லாத நேரத்தில், அவரின் தாயைக் கட்டிப் போட்டு, இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 

டிரேடிங் கம்பெனியில் பலரிடம் பணத்தைப்பெற்று மகாதேவ் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. பணத்தை கொடுத்தவர்கள் அவ்வப்போது அலுவலகத்திற்கு வந்து சத்தம் போட்டுள்ளனர். இவ்வாறு பெற்ற பணத்தை மகாதேவ் வீட்டில் நகைகளாகவும், பணமாகவும் வைத்திருக்கலாம் என்று எண்ணி கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியுள்ளார். 

மேலும், வீட்டில் அவர் எதிர்பார்த்த நகையும் பணமும் இல்லாததால், ஆத்திரமடைந்து மகாதேவ்-ன் தாயைக் கட்டிப்போட்டு, வீட்டில் வேறு எங்கேயாவது பணம் இருக்கிறதா என மிரட்டி வீடியோ எடுத்ததாகவும் கூறியுள்ளார். 

மோசடி பணத்தில் வாங்கிய நகை பணத்தை கொள்ளை அடிப்பதில் தப்பில்லை எனவும், மேலும் தனக்கு சம்பள பாக்கி தராததால் இதுபோன்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டதாகவும் மணிகண்டன் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com