

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் ,தொண்டர்கள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (பிப்ரவரி 13) நடந்தது. இந்த பிரசார கூட்டத்தில் பேசிய விஜய் திமுக அரசை நேரடியாகவும் அதிமுகவை மறைமுகமாகவும் விமர்சித்து கடுமையாக பேசியிருந்தார். அந்த சூடு மறையுமுன்னே துயர சம்பவம் ஒன்று அரங்கேறியது தவெக-வினரை அதிர்ச்சிக்கு உள்ளடக்கியுள்ளது.
ஆம்..சேலத்தில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விஜய் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளியான மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ் (37) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைகாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
இது குறித்து சம்பவம் நடந்த உடனே தவெக இணை பொது செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது "சேலத்தில் விஜய் தலைமையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற வெள்ளிப் பட்டறை தொழிலாளி சூரஜ் (37)வெயிலின் உக்கிரம் தாங்காமல் மயங்கி விழுந்தார். உடனடியாக சுமார் 1 மணியளவில் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ குழு மூலம் முதலுதவிகள் செய்யப்பட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்நிலையில், மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது. இளைஞர் சூரஜின் இந்த எதிர்பாராத மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேம். மேலும் தலைமையிடம் கலந்து ஆலோசித்து அவர் குடும்பத்திற்கும் உதவிகள் வழங்கப்படும் " என கூறியுள்ளார்.
தவெக கட்சி பல சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஏற்கனவே விஜய் பங்கேற்ற கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வேதனையான நிகழ்வு இன்னும் மறையாமல் அது தொடர்பான சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது விஜய் கூட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்து ஒருவர் மறைந்தது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் கூட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படடிருந்ததும் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
சூரஜ் விஜயைப் பார்க்க சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வெயிலில் இருந்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என்றும் ஏற்கனவே அவருக்கு உடல்நல பிரச்சனைகள் இருந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொணடு உயிரிழந்தார் எனவும் அவர் கூட்டத்திற்கு வந்தவர் அல்ல வழிபோக்கர் எனவும்பலவித கருத்துக்கள் தற்போது வலம் வருகிறது.
காவல் துறையினர் கூறும்போது அவர் முன்பு இதய சம்பந்தமான சிகிச்சை (கார்டியக் பிரச்சனை / ஸ்டெண்ட் திறப்பு) எடுத்திருந்தார் போல உள்ளது, இதனால் வெயிலின் காரணமாக உடல் பாதிக்கப்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் உள்ளன. இருப்பினும் உண்மை நிலை என்ன என்பது காவல்துறை விசாரணையில் விரைவில் தெரியவரும். தற்போது சேலத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்னதானப்பட்டி போலீசார் கூறுகையில், “மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சூரஜ் (37), சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். சுராஜ் இரு ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
விஜய்யின் மீது இருந்த ஆர்வத்தில் அவரை பார்க்க வந்துள்ளார். அப்போது கூட்ட நெரிசல் மற்றும் வெயில் தாக்கத்தில் மயங்கி சரிந்து விழுந்து உயிரிழந்ததாக தெரிகிறது” என்று தெரிவித்தனர். இந்நிலையில், சூரஜ் மரணத்தை சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தவெக கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் முக்கியமாக விஜயை பார்க்க ரசிகர்கள் கூடும் கட்டுக்குள் அடங்காத கூட்டம் பற்றிய விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் விவாதமாக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸின் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் செய்தி தெரிவித்து சுராஜ் குடும்பத்திற்கு ஆறுதல் தந்து வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த மரணத்தின் உண்மை நிலை தெரியும் என்பது மக்கள் எதிர்பார்க்கப்படுகிறது.