நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி , நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் ட்விட்டர் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல்நலக்குறைவு காரணமாக மறைந்த நடிகர் சரத்பாபு மறைவுக்கு அரசியல் தலைவர்கள் , சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சரத்பாபு தனது சீரிய நடிப்பிற்காக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது :
”தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற ஏராளமான திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் இன்றும் தமிழ் ரசிகர்களால் நினைவுகூறப்படுகிறது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பழம்பெரும் நடிகர் சரத்பாபுவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது திறமையும், திரைத்துறைக்கான பங்களிப்பும் என்றும் நினைவுகூறப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தி கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
.அந்த வகையில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது:
நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளார்.