கர்நாடக மாநில மக்களுக்கு காங்கிரஸ் அளித்த வாக்குறுதிப்படி ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்குவதை மத்திய அரசு தடுத்து வருவதாக முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.
அன்னபாக்கியா திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாகவும் அவர் கூறினார். அரிசியில் மத்திய அரசு அரசியல் செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனினும் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை உரிய நேரத்தில் செயல்படுத்த மாநில அரசு அனைத்து முயற்சியும் மேற்கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, இது தொடர்பாக அரிசி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலங்களிடம் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் அவர் கூறினார்.
வருகிற ஜூலை 1 முதல் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக இந்திய உணவுக்கழகத்திடம் கூடுதல் அரசி கேட்டிருந்தோம். முதலில் தருவதாக
சொன்னவர்கள் இப்போது முடியாது என்று கைவிரிக்கின்றனர். மத்திய அரசின் நெருக்கடிதான் இதற்கு காரணமாகும்.
ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு நல்லபெயர் வந்துவிடக்கூடாது என்று மத்திய அரசு நினைப்பதாகத் தெரிகிறது.
தற்போது ஏழைகளுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தோம். இதற்காக இந்திய உணவுக்கழகத்திடம் கூடுதல் அரிசி கேட்டு விண்ணப்பித்தோம். முதலில் தருகிறோம் என்று சொன்னார்கள். அவர்களிடம் 7 லட்சம் டன் அரசி கையிருப்பில் இருக்கின்றபோதிலும் திடீரென்று இப்போது தரமுடியாது என கையை விரிக்கிறார்கள். இதன் பின்னணியில் மத்திய அரசு உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஏழைகளுக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மாநில அமைச்சருமான சுனில் குமார் கர்கலா, சித்தராமையா பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச அரிசி 5 கிலோவிலிருந்து 10 கிலோவாக அதிகரிக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது முதல்வரின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.
மேலும் ஆட்சிக்கு வருவதற்கு முன் வாக்குறுதிகளை அளிப்பதும் பின்னர் ஆட்சிக்கு வந்தபின் அதை நிறைவேற்ற முடியாத சூழலில் மத்திய அரசின் மீது பழிபோடுவதும் எந்த விதத்தில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.