ராஜஸ்தான் மாநில மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் கெலோட் அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநில மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் கெலோட் அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநில மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், அடுத்த 100 யூனிட் மின்சாரத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநில முதல்வர் அசோக் கெலோட் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் 1.5 கோடி குடும்பங்கள் பலன்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும், கர்நாடகத்தில் காங்கிரஸ் அறிவித்த இலவசங்களுக்கு மக்களிடையே வரவேற்பு இருந்த காரணத்தினாலும் முதல்வர் கெலோட் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில் அவர்கள் சில மாற்றங்களை விரும்பிய நிலையில் மின்சார கட்டணத்தில் சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக ஆஜ்மிர் வந்து பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவைத்து காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிய நிலையில் முதல்வர் கெலோட்டின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ.500 என பாதியாக குறைத்து காங்கிரஸ் அரசு அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டு கெலோட் அரசு மெகா சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கியது. இதன்படி காப்பீடு செய்துகொண்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.25 லட்சம் வரையில் இலவச மருத்துவ சிகிச்சை பெறமுடியும். மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும்

மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.1,000- மாக அதிகரிக்கப்பட்டது.

இலவச மின்சாரம், இலவச குடிநீர் ஆகிய வாக்குறுதிகள் மூலம் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. பஞ்சாபிலும் இதே வாக்குறுதிகள் மூலம் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது.

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் என பல்வேறு இலவச வாக்குறுதிகளை அளித்ததை அடுத்து தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com